சென்னை, எண்ணூர் கடலில் குளித்தபோது அலையில் சிக்கிய பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். எர்ணாவூர் பெரிய காசி கோவில்குப்பம் 1வது தெருவை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் கவுதம் (15). அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ஜோதிஷ் (15), பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நண்பர்களான இருவரும் நேற்று முன்தினம் மாலை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் கடலில் குளித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென வந்த ராட்சத அலை இருவரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றுள்ளது. இதை பார்த்து அங்கிருந்த மீனவர்கள் ஓடி வந்து கடலுக்குள் சென்று அலையில் சிக்கி போராடிக் கொண்டிருந்த இரண்டு பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவர்களை பரிசோதித்த டாக்டர் சிறுவன் கவுதம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மற்றொரு மாணவன் ஜோதீஸ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
