இந்திய பேட்மின்டன் சங்கம் மற்றும் தமிழ்நாடு பேட்மின்டன் சங்கம் சார்பில், ஐந்து ஆண்டுகளுக்கு பின், தேசிய அளவில் சீனியர் பேட்மின்டன் போட்டி, சென்னையில் நேற்று தொடங்கியது.
முதல்ல்முறையாக, 1,300-க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியின் தொடக்க விழாவில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பா.ம.க., தலைவரும் தமிழ்நாடு பேட்மின்டன் சங்கத்தின் தலைவருமான அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில், ஆதவ் அர்ஜுனா பேசியதாவது: கடந்த, 1994-ம் ஆண்டுக்குப்பின், தமிழகத்தில் விளையாட்டு ரீதியான வளர்ச்சிகள் எதுவும் இல்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், சென்னை நேரு விளையாட்டு அரங்கம், வேளச்சேரி அரங்கம் கட்டப்பட்டது. இந்த, 30 ஆண்டுகளாக, கர்நாடகா, பஞ்சாப் மாநிலங்கள், விளையாட்டு துறையில் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளன. ஆனால், இங்கு எந்த வளர்ச்சியும் இல்லை. அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்குள், தமிழகத்தில் விளையாட்டு தரத்தை சர்வதேச அளவில் உயர்த்துவோம். இதுகுறித்து, முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். விளையாட்டு துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க ஒப்புதல் வாங்கியுள்ளோம். மேலும், விளையாட்டு துறை சார்பில், தினமும் காலை 7:00 மணிக்கு நேரு விளையாட்டு அரங்கில் பணிகளை தொடங்குகிறோம். நேரு விளையாட்டு அரங்கத்தை, ஒலிம்பிக் பவனாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தர்மபுரி, திருவண்ணாமலை, திருநெல்வேலி போன்ற பின்தங்கிய மாவட்டங்களில், ஒலிம்பிக் சங்கம் அமைக்கவும், அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு விடுதிகள் கட்டவும் முயற்சிகள் எடுக்க உள்ளோம்.

Pursue M.Tech In AI Without Quitting Your Job
Flexible learning designed for professionals in fast-growing fields
இது தொடர்பாக முதல்வரிடம் பேசியபோது, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார். ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு ஆண்டுதோறும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதுபோன்று, ‘ஸ்போர்ட்ஸ் பார் எவ்ரிஒன்’ என்ற பெயரில், தமிழக எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். இதில், அனைத்து கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் ஒன்றாகச் சேர்ந்து விளையாட வேண்டும். தி.மு.க., – அ.தி.மு.க., என்ற பிரிவு இல்லாமல், அனைவரும் ஒரே அணியாக நிற்க வேண்டும். தமிழகத்தில் விளையாட்டு துறையையும், தமிழக வீரர் – -வீராங்கனைகளையும், சர்வதேச அளவில் உயர்த்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.
