தெஹ்ரான்: அணுமின் நிலையம் மற்றும் பிற மின்சார உள்கட்டமைப்பு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், செங்கடல் வழித்தடத்தை மூட வேண்டும் என என ஹவுதி அமைப்பிற்கு ஈரான் உத்தரவிட்டு உள்ளதால் பதற்றம் அதிகரித்து உள்ளது.
ஈரானின் அறிவுறுத்தலை தொடர்ந்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏமனின் மலைப்பகுதிகளில் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி படையினர் தயார் நிலையில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹோர்முஸ் நீரிணையை தொடர்ந்து செங்கடல் வழித்தடத்தின் மீது ஈரானின் கவனம் திரும்பி இருப்பது சர்வதேச நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மேலும் இது உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு ஒரு சக்திவாய்ந்த புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கி உள்ளது. ஈரானின் மின்சக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் விடுத்த அச்சுறுத்தலுக்குப் பிறகு ஹவுதி அமைப்பிற்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
ஒருவேளை ஈரான் – அமெரிக்கா மோதல் மிகவும் தீவிரமடைந்து ஈரானின் உத்தரவுப்படி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மூலம் செங்கடல் வழித்தடமும் மூடப்பட்டால், உலகளவில் கடுமையான எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும். கப்பல்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றிச் செல்ல வேண்டியிருக்கும் என்பதால் சரக்குக் கட்டணமும், கச்சா எண்ணெய் விலையும் முன்பை விட கடுமையாக உயரும் என பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.
உலக எண்ணெய் விநியோகத்தில் சுமார் 10% முதல் 12% வரையிலான கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் செங்கடல் மற்றும் அதன் தெற்கு நுழைவாயிலான பாப் எல்-மண்டேப் (Bab el-Mandeb) நீரிணை வழியாகக் கொண்டு செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.
