கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாவட்டச் சிறையில் மாற்றுத்திறனாளி இளைஞரான சபரி வர்மன் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் திடீரென அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, சபரி வர்மனின் உடலை காவல்துறையினர் பிரேதப்

பரிசோதனைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தனர். அங்கு அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில், ‘சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருப்பது’ உறுதியானது. இதனால் சபரி வர்மனின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். சபரி வர்மன் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும், வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை அவரது குடும்பத்தினர் முன் வைத்துள்ளனர். அதுவரையில் அவரது உடலை வாங்க மாட்டோம் என்று குடும்பத்தினர் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் ஆகியோர் சபரி வர்மனின் இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். அப்போது, சபரி வர்மனின் மரணத்திற்கான சந்தேகங்கள் அகலும் வரை உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று அமைச்சர்களிடம் அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
பிரேதப் பரிசோதனை தொடர்பான வீடியோ காட்சிகளை மக்கள் கண்காணிப்பகம், மனித உரிமை அமைப்பின் உதவியோடு மருத்துவர்கள் மூலம் ஆய்வு செய்து தங்கள் சந்தேகங்களைத் தீர்க்க வேண்டும் எனவும், மனித உரிமை சார்ந்த வழக்கறிஞர்களிடம் கலந்தாலோசித்த பின்பு சடலத்தை வாங்குவோம் என அமைச்சர்களிடம் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
நிவாரணத்தொகை, இலவச வீட்டுமனை, குடும்பத்தில் ஒருவருக்கு தற்காலிக அரசு வேலை உள்ளிட்டக் கோப்புகளுடன் வந்திருந்த அமைச்சர்கள், அதை வழங்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
