Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

9 பவுன் நகைக்காக பெண் அடித்துக்கொலை- வாலிபர் வெறிச்செயல்

9 பவுன் நகைக்காக பெண் அடித்துக்கொலை- வாலிபர் வெறிச்செயல்

நெல்லை டவுனில் வீட்டில் மர்மமாக இறந்த கிடந்த பெண் நகைக்காக கட்டையால் அடித்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறையைச் சேர்ந்தவர் ஆபேல் ராஜா. இவரது மனைவி மரிய ஜெயா (41). ஆபேல் ராஜா கோவையில் வேலை பார்த்து வருகிறார்.

மரிய ஜெயா மார்க்கெட்டிங் தொழில் செய்து வந்ததோடு, பல்வேறு ஊர்களுக்கும் சென்று முதியவர்களுக்கு உதவி செய்து வந்துள்ளார். கடந்த 9ம் தேதி நெல்லைக்குச் செல்வதாக கணவரிடம் கூறிவிட்டு பைக்கில் புறப்பட்டவர், இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த ஆபேல் ராஜா, கடந்த 10ம்தேதி முக்கூடல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பள்ளி எதிரே உள்ள ஒரு வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு மாயமான மரிய ஜெயா சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. முதலில் இதுகுறித்து மர்மச்சாவு என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் நகைகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

இதற்கிடையே, மரிய ஜெயாவின் தலையில் பலத்த காயங்கள் இருப்பதாகவும், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியானது. இதையடுத்து, கொலையாளிகளைப் பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கினர். மரிய ஜெயா மார்க்கெட்டிங் தொழிலுக்காக டவுன் கல்லணை பள்ளி அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

சம்பவத்தன்று அந்த வீட்டிற்கு மரிய ஜெயாவுடன், தச்சநல்லூர் செல்வ விக்னேஷ் நகர் குறிஞ்சி தெருவைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் சுரேஷ்குமார் (26) வந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த சுரேஷ்குமார் கட்டையால் மரிய ஜெயாவின் பின்பக்க தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் சுருண்டு விழுந்த மரிய ஜெயா பரிதாபமாக உயிரிழந்ததார்.

பின்னர், அவர் கழுத்தில் கிடந்த 9 பவுன் நகைகளைப் பறித்துவிட்டு சுரேஷ்குமார் தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், இந்த கொடூர சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா, கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!