Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழா… மருளாலி ஆடுகளின் ரத்தத்தை குடித்து பரவசம்…

திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நேர்த்திக்கடனாக 1,000 ஆடுகள் பலியிடப்படுவது வழக்கம்.
திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் ஆறு கண் பாலம் அருகில் அமைந்து உள்ளது குழுமாயி அம்மன் கோவில். சோழ மன்னர்களின் குல தெய்வமாக வணங்கப்பட்டு தற்போது திருச்சி நகர காவல் தெய்வமாக விளங்கும் இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் குட்டி குடித்தல் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இந்த ஆண்டு திருவிழா கடந்த பிப்ரவரி 22ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 6ம் தேதி இரவு மறுகாப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், மறுநாள் இரவு காளியாவட்டம் நிகழ்ச்சியும் நடந்தது. அப்போது பக்தர்கள் அம்மனை கோயிலில் இருந்து மேளதாளம் முழங்க தேரில் புத்தூர் மந்தைக்கு அழைத்து வந்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டி குடித்தல் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி புத்தூர் மந்தையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். அம்மனின் அருள்

பெற்ற மருளாளியை (சாமி ஆடுபவர்) பக்தர்கள் மேளதாளம் முழங்க தோளில் தூக்கி வந்தனர். அப்போது கொம்பு உள்ளிட்ட வாத்தியங்களும் இசைக்கப்பட்டது.

பக்தர்கள் நேர்த்திக்கடனாகவும், வேண்டுதலுக்காகவும் கொண்டு வந்திருந்த ஆடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மந்தைக்கு முன் உள்ள தேரின் அருகில் மருளாளி வந்ததும் ஆடுகள் மருளாளியிடம் தூக்கி கொடுக்கப்பட்டது. மருளாளி அவற்றின் கழுத்தை கடித்து ரத்தத்தை உறிஞ்சி குடித்தது பரவசத்தை ஏற்படுத்தியது. முதலில் அரசு சார்பில் மாவட்ட நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட ஆட்டு குட்டியின் ரத்தத்தை குடித்தார். கோயிலில் தற்பொழு வரை 500க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன. குட்டி குடித்திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறனர். இன்று (9ம்தேதி) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. நாளை (10ம்தேதி) சாமி குடிபுகுதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

புத்தூர் பகுதி முழுவதும் பல்வேறு அமைப்புகள் மற்றும் கத்தினர் சார்பில் வழி நெடுங்கிலும் அன்னதானங்கள் போடப்பட்டு வருகிறது. இந்த குட்டி குடித்தல் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!