சென்னை: மாணவர் போராட்டங்கள் எச்சரிக்கை மணி, நீட் முற்றிலுமாகத் தோல்வியடைந்துள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் தலையங்கத்தில் எழுதியிருப்பதாவது: நீட் வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து வரலாறு காணாத வகையில் நாடு முழுவதும் மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டங்கள், வெறும் ஒரு தேர்வின் நம்பகத்தன்மை சீர்குலைந்ததற்கான எதிர்வினை மட்டுமல்ல. தகுதி அடிப்படையிலானது என முன்னிறுத்தப்பட்ட ஓர் அமைப்பின் மீதான ஆழமான நம்பிக்கையிழப்பையே அவை வெளிப்படுத்துகின்றன. லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நடைமுறையின் நேர்மை மீதான நம்பிக்கை தகரும்போது, அது ஒரு நாட்டின் மனச்சாட்சியையே உலுக்குகிறது.
Rail Freight
நீட்டுக்கு எதிராக முதன்முதலில் எச்சரிக்கைக் குரல் எழுப்பிய மாநிலம் தமிழ்நாடுதான். அதன் காரணம், நீட் தேர்வு நடத்தப்பட்ட விதத்தில் முறைகேடுகள் இருந்தன என்பதல்ல. மருத்துவம் படிக்க விரும்பும் ஒவ்வொரு மாணவரின் எதிர்காலத்தையும் ஒரு தேசிய நுழைவுத் தேர்வில் பணயம் வைத்து தீர்மானிக்க வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையையே நாங்கள் கேள்விக்குட்படுத்தினோம். நடைமுறையில் பிரச்னை என்பதைவிட அதன் அடிப்படையே பிரச்னைக்குரியது. அண்மைய நிகழ்வுகள் எங்கள் கவலை முற்றிலும் நியாயமானது என்பதையே உறுதிப்படுத்தியுள்ளன. நீட்டை அறிமுகப்படுத்தியபோது, ஒன்றிய அரசு மூன்று முக்கிய வாக்குறுதிகளை அளித்தது. முதலாவதாக, பல்வேறு நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டிய சுமையை அது குறைக்கும் என்று கூறப்பட்டது.
இரண்டாவதாக, மருத்துவச் சேர்க்கைகளில் நிலவி வந்த கேப்பிடேஷன் கட்டணம் மற்றும் வணிகமயமாக்கலை அது முற்றிலும் ஒழிக்கும் என உறுதியளிக்கப்பட்டது. மூன்றாவதாக, மிகத் தகுதியான மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதை உறுதிசெய்வதன் மூலம் மருத்துவக் கல்வித் தரம் உயரும், அதன் விளைவாக சிறந்த மருத்துவர்கள் உருவாவார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால், இந்த மூன்று வாக்குறுதிகளிலும் நீட் முற்றிலுமாகத் தோல்வியடைந்துள்ளது.
சமத்துவமின்மையைக் குறைப்பதற்குப் பதிலாக, கற்றலின் மையத்தை பள்ளிக்கூடங்களிலிருந்து பயிற்சி மையங்களுக்கு நீட் மாற்றிவிட்டது. இன்று தகுதி என்பது தொடர்ச்சியான கல்விச் செயல்திறனின் அடிப்படையில் மதிப்பிடப்படுவதில்லை; பயிற்சி மையங்கள் கற்பிக்கும் தேர்வு எழுதும் உத்திகளை எவ்வளவு திறம்பட ஒரு மாணவர் கற்றுக்கொண்டுள்ளார் என்பதன் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது.
இதன் பயனை, அதிக கட்டணம் செலுத்தி பயிற்சி பெறும் வசதியுள்ள மாணவர்கள் அதிகமாக அனுபவிக்கின்றனர். அதேவேளையில், கிராமப்புற மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள், முதல் தலைமுறையாகக் கல்வி கற்க வரும் மாணவர்கள், மாநிலப் பாடத்திட்டம் மற்றும் தாய்மொழி வழியில் கல்வி பயிலும் மாணவர்கள் ஆகியோர் கடுமையாகப் பின்னடைவைச் சந்திக்கின்றனர். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற நாடுகள், மாணவர்களைப் பள்ளிக் கல்விச் செயல்திறன், மதிப்பெண்களைச் சமன்படுத்தும் முறைகள் மற்றும் ஒட்டுமொத்தத் திறனை மதிப்பிடும் அணுகுமுறைகளின் அடிப்படையிலேயே சேர்க்கின்றன; நாடு முழுவதற்குமான ஒரே நுழைவுத் தேர்வின் அடிப்படையில் அல்ல.
நீட் தேர்வில் இதுவரை நடந்தவையே, ‘தகுதி’ என்ற பெயரில் முன்வைக்கப்படும் வாதத்தின் மாயையை மேலும் அம்பலப்படுத்துகிறது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தகுதித் தேர்ச்சி வரம்பு மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது. முதுநிலை மற்றும் உயர் சிறப்புப் படிப்புகளுக்கான சேர்க்கைகளில், அதிகக் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடங்களை நிரப்புவதற்காக, தகுதிக்கான பெர்சென்டைல் பலமுறை பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது; சில நேரங்களில் பூஜ்ஜியத்துக்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்கள்கூட தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தேர்வுமுறையானது உண்மையிலேயே தகுதியால் நிர்வகிக்கப்பட்டிருந்தால், இத்தகைய அசாதாரணமான தளர்வுகளுக்கான தேவையே எழுந்திருக்காது. உண்மை நிலை இதற்கு முற்றிலும் மாறானது.
குறைந்த எண்ணிக்கையிலான அரசு மருத்துவக் கல்லூரி இடங்களுக்காக ஏழை மாணவர்கள் மிகக் கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், பொருளாதார வசதி படைத்தவர்கள் மிகவும் தளர்வான தகுதி அளவுகோல்களிலேயே தனியார் மருத்துவக் கல்வியைப் பெற முடிகிறது. இது தகுதியை முன்னிறுத்துவது அல்ல; வசதி படைத்தவர்களின் ஆதிக்கத்தை அமைப்புரீதியாக நிலைநிறுத்தும் முறையாகும். நீட் மருத்துவக் கல்வியின் வணிகமயமாக்கலைக் கட்டுப்படுத்தியுள்ளது என்பது மற்றுமொரு தவறான நம்பிக்கை. நீட்டை மையமாகக் கொண்ட ‘கோச்சிங் சென்டர்’ தொழில், இன்று பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வணிகமாக வளர்ந்துள்ளது. நீட்டுக்குத் தங்கள் பிள்ளைகளைத் தயார்படுத்துவதற்காக, குடும்பங்கள் பல ஆண்டுகளாகப் பெரும் தொகைகளைச் செலவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. நீட் அகற்றுவதாக வாக்குறுதியளித்த பொருளாதாரச் சுமை மறைந்துவிடவில்லை; அதன் வடிவம்தான் மாறியுள்ளது.
கேப்பிடேஷன் கட்டணத்துக்கு பதிலாக, பயிற்சி மையக் கட்டணம் அந்த இடத்தைப் பிடித்துள்ளது. அதேநேரத்தில், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளும் மருத்துவக் கல்வியை வணிகமயமாக்கப் புதிய வழிகளைக் கண்டுபிடித்துள்ளன. முன்புபோல் கேப்பிடேஷன் கட்டணம் மற்றும் நன்கொடைகளை நேரடியாகக் கோருவதற்குப் பதிலாக, கல்விக் கட்டணம் மற்றும் பிற நிறுவனக் கட்டணங்களைப் பல மடங்கு உயர்த்தியுள்ளன. இதன் விளைவாக, ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு மருத்துவக் கல்வி மேலும் எட்டாக்கனியாக மாறியுள்ளது. இந்தப் பிரச்சினைகளை தொடக்கத்திலேயே உணர்ந்த மாநிலம் தமிழ்நாடு. அதன் விளைவாக, ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தோம். அந்தக் குழு, நீட் மருத்துவக் கல்வித் தரத்தை மேம்படுத்தவும் இல்லை, சமூகநீதியை உறுதிப்படுத்தவும் இல்லை என்ற தெளிவான முடிவுக்கு வந்தது.
இதன் அடிப்படையில், நீட்டிலிருந்து விலக்கு கோரி தமிழ்நாடு சட்டப்பேரவை ஒருமனதாக மசோதாவை நிறைவேற்றியது. ஆனால், ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்தார். மாநிலம் முன்வைத்த கவலைகளின் சாரத்தைப் புரிந்துகொண்டு ஆக்கப்பூர்வமாக அணுக ஒன்றிய அரசும் முன்வரவில்லை. கல்வி நிறுவனங்களை நிறுவவும், ஆசிரியர்களை நியமிக்கவும், கல்வித் தரத்தைப் பராமரிக்கவும், மருத்துவக் கல்விக்கு நிதியளிக்கவும் மாநிலங்களை நம்பும்போது, அவற்றின் கல்வி முறைகளுக்கும் சமூகநீதிக் கொள்கைகளுக்கும் ஏற்ப மாணவர் சேர்க்கையைத் தீர்மானிக்கும் அதிகாரத்திலும் மாநிலங்களைத்தான் நம்ப வேண்டும். பள்ளிக் கல்வியை வலுப்படுத்துதல், பள்ளிக் கல்வி வாரியங்களின் மதிப்பீடுகள் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்தல், மாநிலங்கள் தங்களின் அரசியலமைப்புச் சட்டப் பொறுப்புகளுக்கும் உள்ளூர்ச் சூழல்களுக்கும் ஏற்ற மாணவர் சேர்க்கைக் கொள்கைகளை வகுக்க அனுமதித்தல் ஆகியவற்றில்தான் தீர்வு உள்ளது.
வெவ்வேறு கல்வி வாரியங்கள் வழங்கும் மதிப்பெண்களைப் புள்ளியியல் சமநிலைப்படுத்தல் முறையின் மூலம் நியாயமாக ஒப்பிட முடியும். நீட்டிலிருந்து விலக்கு கோரும் மாநிலங்களுக்கு அந்த உரிமை வழங்கப்பட வேண்டும். மாணவர் சேர்க்கை முறைகளில் நிலவும் பன்முகத்தன்மையால் கல்வித் தரம் பாதிப்படையாது. மாறாக, அது சமத்துவத்தையும் சிறப்பான வெளிப்பாட்டையும் மேலும் வலுப்படுத்தக்கூடும். அவசரமாக மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய மற்றொரு முக்கிய அம்சம் அகில இந்திய ஒதுக்கீடு முறையாகும். நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உருவான இந்த முறை, மாநிலங்களின் நிதியில் உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி இடங்களில் ஒரு பகுதியை மத்தியத் தொகுப்பிற்கு மாற்றுகிறது. இதன் மூலம் கூட்டாட்சித் தத்துவம் மற்றும் சமூகநீதி ஆகியவை பலவீனப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, முதுநிலை மருத்துவப் படிப்புக்காக வேறு மாநிலங்களுக்குச் செல்ல பெண்கள் பெரும்பாலும் தயங்கும் சூழலில், இந்த முறை அவர்களை அளவுக்கு மீறிப் பாதிக்கிறது.
History
பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்வதிலும் இது பயனளிக்கவில்லை. மேலும், தாங்கள் செய்த முதலீட்டின் முழுப் பலனையும் மாநிலங்கள் பெற முடியாத நிலையை உருவாக்குகிறது. நாடு முழுவதும் நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்கள், தேர்வு நடத்தும் முறைகளை மட்டும் மேம்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தும் எச்சரிக்கை அல்ல. பெரும் தொகையையும் காலத்தையும் பணயமாக கோரும் தேசிய நுழைவுத் தேர்வுகள் என்ற ஒட்டுமொத்தக் கட்டமைப்பையே அடிப்படையில் மீளாய்வு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதற்கான எச்சரிக்கை மணியாக அவை அமைய வேண்டும்.
மாநிலங்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், மருத்துவத் துறையினர் மற்றும் இதில் தொடர்புடைய அனைவரோடும் திறந்த மனதுடன் ஒன்றிய அரசு கலந்தாலோசிக்க வேண்டும். ஒற்றைத்துவத்தையே இறுதி இலக்காகக் கருதும் மனப்போக்கை அது கைவிட வேண்டும். இந்தியாவுக்குத் தேவை அதிகாரக்குவிப்பு அல்ல. மாநிலங்கள் மீதும், மாநில அரசுப் பள்ளிகள் மீதும், மாணவர்கள் மீதும் அதிக நம்பிக்கை வைப்பதே நாட்டின் இன்றைய தேவை. மருத்துவக் கல்வியின் எதிர்காலம் இன்னும் நியாயமான, கூட்டாட்சித் தத்துவத்தை மேலும் மதிக்கும் அணுகுமுறையைக் கோருகின்றது. இவ்வாறு அவர் எழுதி உள்ளார்.
எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பதிவு
ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவைச் சிதைப்பதே நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளின் உண்மையான நோக்கம். அந்தத் தடையை உடைப்பதற்கான படையாக திமுக என்றைக்கும் முன் வரிசையில் வாள் தூக்கி நிற்கும்.
