எலக்ட்ரீசியன் தூக்கிட்டு தற்கொலை..
திருச்சி புத்தூர் கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் சத்யா சங்கர் வயது 45. இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். இவர் அடிக்கடி மதுபோதையில் வீட்டில் மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் வழக்கம் போல் இவர் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் கோபித்துக் கொண்ட மனைவி பக்கத்து வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது சத்யா சங்கர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாட்டரி விற்றவர் கைது; ஒருவர் தப்பி ஓட்டம்
திருச்சி அரியமங்கலம் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜான் துரைராஜ் மற்றும் போலீசார் அரியமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த பாலக்கரை கெம்ஸ்டவுன் பகுதியைச் சேர்ந்த குணா என்ற குணசேகரன் வயது 57 கொட்டப்பட்டு இந்திரா நகரை சேர்ந்த சாலமோன் 62ஆகிய இரண்டு பேரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அங்கிருந்து குணசேகரன் தப்பி சென்று விட்டார்.இதையடுத்து அந்த மோட்டார் சைக்கிளில் சோதனை செய்தபோது அதில் லாட்டரி டிக்கெட் 2 செல்போன்கள், ரூ 120 இருப்பது தெரியவந்தது. இணையடுத்து போலீசார் சாலமோனை கைது செய்து,மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.மேலும் தப்பி ஓடிய குணசேகரனை தேடி வருகின்றனர்.
போதை மாத்திரைகள் விற்பனை -2 பேர் கைது
திருச்சி பாலக்கரை பெல்ஸ் மைதானம் அருகே போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக பாலக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு போதைமாத்திரைகள் விற்பனை செய்து கொண்டிருந்த மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த நாகராஜ் வயது 23 மற்றும் காஜா பேட்டை பகுதியை சேர்ந்த காஜா மொய்தீன் 26 ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து 214 போதை மாத்திரைகள் ஒரு செல்போன் ரூபாய் 500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி
திருச்சி சோமரசம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி வசந்தி வயது 52. இவருக்கு புதுக்கோட்டை கொளத்தூர் பகுதியை சேர்ந்த இருதயராஜ் 50 என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். பின்னர் இருதயராஜ் வசந்தியின் மகனுக்கு, நீதிமன்றத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்தார். அவரது வார்த்தைகளை நம்பிய வசந்தி கடந்த 2022 முதல்2025 வரை பல்வேறு தவணைகளாக ரூ.5 லட்சத்து 30 ஆயிரத்தை இருதயராஜிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்ற பிறகு, இருதயராஜ் வசந்தியின் மகனுக்கு எந்த வேலையையும் ஏற்பாடு செய்யவில்லை, பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து அவர் திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் இருதயராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி உறையூர் பெண்ணிடம்
லாட்டரி யில் பரிசு விழுந்ததாக கூறி பணம் மோசடி
திருச்சி ஜூலை 28-
திருச்சி உறையூர் ராமலிங்கம் நகர் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மனைவி உஷா வயது 39. இவர் கடந்த 25-ந்தேதி ஆன்லைனில் இன்ஸ்டாகிராம் பார்த்துக் கொண்டிருந்தபோது கேரள லாட்டரி தொடர்பான விளம்பரத்தை பார்த்துள்ளார். பின்னர் இந்த லாட்டரிக்கு விண்ணப்பித்து உள்ளார். இதைத்தொடர்ந்து மர்மநபர் ஒருவர் லாட்டரிக்கு பணம் செலுத்துமாறு உஷாவை தொடர்பு கொண்டுள்ளார். பின்னர் அவர் பணம் செலுத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து, அந்த மர்ம நபர் மீண்டும் உஷாவை தொடர்புகொண்டு, நீங்கள் கேரளா லாட்டரியில் பரிசு வென்றுள்ளதாகவும், ஆனால் அதைப் பெறுவதற்கு வரி செலுத்த வேண்டும் என்றும் கூறினார். அவரது வார்த்தைகளை நம்பிய உஷா, அந்த மரபு நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூபாய் 2 லட்சத்து 498 அனுப்பி உள்ளார். இதைத் தொடர்ந்து அவருக்கு லாட்டரியில் விழுந்த பரிசு தொகையும் கிடைக்கவில்லை, அவர் செலுத்திய பணமும் திருப்பித் தரவில்லை. இது குறித்து அந்த மர்ம நபரை தொடர்பு கொண்ட போது, அவரது இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த உஷா, இது குறித்து சைபர் கிரைம் போலீசில் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். அதன்பேரில் சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
