கரூரில் “6 மாதங்களாக வறண்ட அமராவதி ஆறு… கழிவுநீர் கலப்பால் மாசு; நடவடிக்கை கோரி கரூர் மக்கள் கோரிக்கை”
கரூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அமராவதி ஆறு, கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக தண்ணீர் இன்றி வறண்ட நிலையில் காணப்படுகிறது. இதனால் கரூர் நகரில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து, பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வழக்கமாக ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு இதுவரை தண்ணீர் திறக்கப்படாததால் ஆறு முழுவதும்

வறண்டு காணப்படுகிறது. மேலும், ஆடி மாதத்தில் அமராவதி ஆற்றில் புனித நீராடுவது பாரம்பரியமாக இருந்து வரும் நிலையில், இந்த ஆண்டு தண்ணீர் இன்றி வரட்சியாக காணப்படுகிறது.
இதற்கிடையில், மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் இருந்து கழிவுநீர் வடிகால்கள் வழியாக சுத்திகரிக்கப்படாத கழிவுநீர், லைட் ஹவுஸ் கார்னர் அருகே உள்ள அமராவதி ஆற்றுப்பாலத்தின் கீழ் நேரடியாக ஆற்றில் கலக்கிறது. அதுமட்டுமின்றி, பிளாஸ்டிக் பாட்டில்கள், மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பிற குப்பைகளும் ஆற்றில் கொட்டப்படுவதால், ஆற்றுநீர் வெண்மை நிறத்தில் மாசடைந்து காணப்படுகிறது.
அமராவதி ஆற்றங்கரையில் உள்ள கிணறுகளின் நீரை குடிநீர் தேவைக்காக பொதுமக்கள்

பயன்படுத்தி வரும் நிலையில், இந்த மாசடைந்த நீரால் பல்வேறு நோய்த்தொற்றுகள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், அமராவதி ஆற்றுநீர் நேரடியாக காவிரி ஆற்றில் கலப்பதால், காவிரி நீரும் மாசடையும் அபாயம் இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் கரூர் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, கழிவுநீர் கலப்பை தடுத்து, அமராவதி ஆற்றை பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
