Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இன்று ஆடி 3ம் வெள்ளி 2026 வீட்டில் அம்மனை வழிபடும் முறை

இன்று ஆடி 3ம் வெள்ளி 2026 வீட்டில் அம்மனை வழிபடும் முறை

ஆடி மாதம் அம்பிகையின் அருளை பரிபூரணமாக பெறுவதற்குரிய மாதமாக கருதப்படுகிறது. அன்னை பராசக்தி தாயுள்ளம் கொண்டவள் என்பதால் அம்பிகைக்குரிய ஆடி மாதத்தில் அம்மனை சரியான முறையில் விரதம் இருந்து வழிபட்டால், நாம் வேண்டிய வரங்களை அம்பிகை அருள்வதுடன், நம்முடைய துன்பங்கள் அனைத்தையும் நீக்கிடுவாள் என்பது ஐதீகம். அதிலும் ஆடி வெள்ளியில் அம்மனுக்கு விரதம் இருப்பது, மிக விரைவான பலனை பெற்றுத் தரும். ஆடி மூன்றாவது வெள்ளியின் சிறப்பு என்ன, இந்த நாளில் அம்பிகையை எப்படி வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு மிகவும் சிறப்பு. இது கேட்ட வரங்களை அள்ளிக் கொடுக்கும் அற்புத மாதமாக ஆன்மீகத்தில் கருதப்படுகிறது. அதிலும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் கோவில்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறும். இந்த ஆடி வெள்ளிக்கிழமைகளில், அம்மனை வேண்டி யார் விரதமிருந்தாலும், அவர்கள் நினைப்பது நிறைவேறும் என்பது நம்பிக்கை. இந்த ஆடி வெள்ளியில் அம்பாளை எவ்வாறு வழிபட்டு அருளை பெறலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஆடி வெள்ளியில் செய்ய வேண்டியவை:
அள்ளி கொடுக்கும் சுக்கிரனுக்குரிய வெள்ளிக்கிழமையன்று, சிங்கத்தின் மேலேறி பவனி வரும் அம்பிகையை வழிபடுவதால், இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறும் என்பது நம்பிக்கை. ஆடி வெள்ளிக்கிழமையன்று காலை மற்றும் மாலை வேளைகளில் வாசலில் கோலம் போட்டு, விளக்கேற்றி வழிபட வேண்டும். வீட்டில் உள்ள அம்மன் படங்களுக்கு தூப, தீப ஆராதனை காட்டி, பிரசாதம் செய்து, அதை மற்றவர்களுக்கு கொடுத்து, நாமும் சாப்பிட்டு வழிபடலாம். அம்மனுக்கு எலுமிச்சை மற்றும் வேப்பிலை மாலை அணிவித்தல், கூழ் ஊற்றுதல், மாலை வேளையில் கோவிலுக்கு செல்லுதல் போன்றவற்றை செய்ய மங்களகரமான வாழ்வு அமையும்.

ஆடி 3ம் வெள்ளி சிறப்புகள் :

ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமையானது அன்னை காளிகாம்பாளுக்கு உகந்ததாகும். காளிகாம்பாள், அம்மன் பார்வதி தேவியின் மற்றொரு வடிவமாவாள். எனவே, காளிகாம்பாளை மூன்றாம் வெள்ளிக்கிழமையின் போது வழிபடுவதால், தைரியம் அதிகரிப்பதோடு, ஆரோக்கியமும் மேம்படும். ஆடி மாதத்தின் அனைத்து வெள்ளிக்கிழமையிலும் வழிபட முடியாதவர்கள், குறைந்தபட்சம் ஒரு வெள்ளிக்கிழமையாவது வழிபட வேண்டும். இந்த நாளில் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே அம்மனுக்கு படையல் இட்டு வழிபடலாம்.

இந்த ஆண்டு ஆடி மூன்றாவது வெள்ளிக் கிழமை ஜூலை 31ம் தேதி வருகிறது. அவிட்டம் நட்சத்திரத்தில் இந்த நாள் அமைந்திருப்பது மிக மிக விசேஷமானதாகும். “அவிட்டத்தில் தவிட்டை தொட்டாலும் தங்கமாகும்” என்பார்கள். காரணம் அவிட்டம் நட்சத்திரம், பெருக்கத்தை தரும் நட்சத்திரமாகும். அவிட்டம் நட்சத்திரத்தில் அமைந்துள்ள ஆடி மூன்றாவது வெள்ளி அன்று வன்னி மரம் மற்றும் வன்னி மரம் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபடுவது சிறப்பு. இந்த நாளில் அம்பாளுடன் விநாயகர், சயன கோலத்தில் இருக்கும் பெருமாள் மற்றும் முருகப் பெருமானை வழிபடுவது சிறப்பு.

பலன்கள்:
ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து காளிகாம்பாளை வழிபடுவதால் திருமண பாக்கியம் கைகூடி வரும். புதுமண தம்பதியருக்கும், நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் எதிர்பார்த்திருப்போருக்கும் நல்ல அறிவாற்றல், புத்தி சாதுர்யத்துடன் கூடிய குழந்தை பாக்கியம் உண்டாகும். அவிட்டம் நட்சத்திரம் வரும் நாளில் செய்யப்படும் இறை வழிபாடு, தானம் ஆகியவை குழப்பங்களை நீக்கி மன அமைதியையும் தெளிவையும் தரும். குடும்பத்தில் செல்வம், சுகம், ஒற்றுமையை பெருக செய்யும். செவ்வாய் மற்றும் சனி தோஷங்களின் தாக்கம் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.

error: Content is protected !!