திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் ஓடும் பேருந்தில் பயணம் செய்த தனது மனைவி மற்றும் மகளை, அரிவாளால் கொடூரமாக வெட்டிய கணவனைச் சக பயணிகள் துணிச்சலாகப் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ருப்பூரில் வசித்து வரும் சந்திரலேகா என்பவர், தனது சொந்த ஊரான தேவாரம் பகுதிக்கு வருவதற்காகப் பேருந்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். இதனையறிந்த அவரது கணவர் மணிக்குமார், மனைவியைத் தாக்கும் நோக்கில் வத்தலகுண்டு பகுதியில் முன்கூட்டியே காத்திருந்துள்ளார். குடும்பக் கருத்து வேறுபாடு காரணமாகத் தொடர்ந்த தகராறு இத்தகைய வன்முறை தாக்குதலுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
பேருந்து வத்தலகுண்டு பேருந்து நிறுத்தத்திற்கு வந்தடைந்த போது, அங்குத் தயார் நிலையில் காத்திருந்த மணிக்குமார் திடீரெனப் பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்தில் அமர்ந்திருந்த தனது மனைவி சந்திரலேகாவைத் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டினார். அப்போதுத் தாயைக் காப்பாற்றத் தடுத்த மகளையும் அவர் அரிவாளால் வெட்டினார். இதனால் பேருந்திற்குள் அலறல் சத்தம் கேட்டுப் பயணிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாகச் சாதுரியமாகச் செயல்பட்ட பயணிகள் மற்றும் நடத்துநர், பேருந்தை நேராகக் காவல் நிலையத்திற்கு ஓட்டிச் சென்று நிறுத்தினர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட மணிக்குமாரைத் தப்பியோட விடாமல் பிடித்து வத்தலகுண்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். படுகாயமடைந்த தாய் மற்றும் மகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
