மேகதாடு அணை கட்டினால் தமிழ்நாடு வறண்ட பாலைவனமாகும் – தமிழக அரசு சட்டரீதியாக தடுக்க வேண்டும்: தருமபுரி எம்எல்ஏ சவுமியா அன்புமணி”
தருமபுரி நகராட்சிக்குட்பட்ட பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சவுமியா அன்புமணி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நகராட்சியில் செயல்பட்டு வரும் கழிவுநீர் மேலாண்மை மற்றும் மேகதாடு அணை விவகாரம் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.
தருமபுரி நகராட்சியில் 33 வார்டுகள் மற்றும் சுமார் 12 ஆயிரம் வீடுகள் உள்ளன. ஆனால், 19 வார்டுகளில் உள்ள 5,900 வீடுகளுக்கு மட்டுமே பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் கழிவுநீர் மட்டுமே சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட பிறகு சனத்குமார் நதியில் வெளியேற்றப்படுவதாகவும் கூறினார்.
மீதமுள்ள 14 வார்டுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக சனத்குமார் நதி மற்றும் ராமக்கால் ஏரியில் கலக்கப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், இது சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும், இதற்காக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நகராட்சிக்கு அபராதம் விதித்திருந்தாலும் அது இதுவரை செலுத்தப்படவில்லை என்றார்.
மேலும், தற்போது புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், அது முடிவடைந்தாலும் தற்போதைய நிலைமையில் தருமபுரியின் நீர்நிலைகளில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலப்பது தொடர்வதாகவும் தெரிவித்தார்.
சுத்திகரிப்பு நிலையத்தைச் சுற்றியுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், நிலையம் முறையாக இயங்காததால் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணற்று நீர் மாசடைந்துள்ளதாகவும், கால்நடைகள் பாதிக்கப்படுவதாகவும் புகார் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார். அதிகாரிகள் அல்லது அரசியல் பிரமுகர்கள் வரும்போது மட்டுமே நிலையம் இயக்கப்படுவதாகவும், மற்ற நாட்களில் பூட்டியே வைக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியதாக தெரிவித்தார்.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பொருத்தியுள்ள அளவீட்டு கருவி பழுதடைந்துள்ளதாகவும், அதைச் சரிசெய்ய ரூ.35 லட்சம் செலவாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் கூறிய அவர், சுத்திகரிப்பு நிலையம் தினமும் முழுமையாக இயங்குவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும், வெளியேறும் நீருக்கான குழாய்கள் உடைந்துள்ளதால் அவற்றை மூன்று மாதங்களுக்குள் மாற்றுவதாக அதிகாரிகள் உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.
மேகதாடு அணை விவகாரம் குறித்து பேசிய சவுமியா அன்புமணி, “மேகதாடு அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு வறண்ட பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஒருமித்த கருத்தை உருவாக்கி மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
மருத்துவர் அன்புமணி தொடங்கிய ‘காவிரியை காப்போம்’ நடைபயணம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது. மேகதாடு பகுதியில் அணை கட்டப்பட்டால் சுமார் 12,500 ஏக்கர் உயிரியல் வளமிக்க வனப்பகுதிகள் நீரில் மூழ்கும். மேலும், கீழ்மட்ட மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் எந்த அணையையும் கட்ட முடியாது என்பது காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடாக உள்ளது. எனவே, மேகதாடு அணை கட்டப்படுவதை சட்டரீதியாக தடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்
