காவிரியில் தண்ணீர் வராத காரணத்தினால் காவிரி ஆறு முற்றிலுமாக வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக நேற்று கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த காவிரி நீரானது தமிழகம் வந்தடைவதற்கு இரண்டிலிருந்து மூன்று நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழர்களின் பாரம்பரிய விழாவாக ஆடி 18 கொண்டாடப்படுகிறது. ஆடி 18 அன்று காவிரி கரையோரம் பொதுமக்கள் பூஜை செய்து வழிபடுபவர்கள். மேலும் திருமணம் ஆன புதுமண தம்பதிகள் ஜோடியாக காவிரி கரைக்கு வந்து தாலியை பிரித்து மீண்டும் கட்டிக் கொள்வது வழக்கம். அந்த வகையில் இன்று தமிழக முழுவதும் ஆடி 18 விமர்சையாக நீர் நிலைகளில் கொண்டாடப்பட்டது. இருப்பினும் டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரை காவிரியில் நீர் வராத காரணத்தினால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள்,புதுமண தம்பதிகள் வித்தியாசமான முறையில் தண்ணீர் டேங்க் அடியில் பூஜை பொருட்களை வைத்து வழிபாடு செய்து ஆடி 18 கொண்டாடி மகிழ்ந்தனர். காவிரியில் தண்ணீர் வராத காரணத்தினால் தண்ணீர் டேங்க் அடியில் வைத்து பூஜை செய்து வழிபட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் காவிரியில் தண்ணீர் வராதது இந்த வருட ஆடி 18 அன்று ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
