தமிழக முதல்வர் விஜய்யை இழிவாக பேசியதாக திமுக இளைஞரணி செயலாளரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினை இன்று ஆகஸ்ட் 4-ந் தேதி போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூரில் நேற்று ஆகஸ்ட் 3-ந் தேதி நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “ ஜூன் மாதம் முடிந்துவிட்டது, ஜூலை மாதமும் முடிந்துவிட்டது, இப்போது ஆகஸ்ட் மாதத்தில் இருக்கிறோம்; ஆனால் இன்னமும் தண்ணீர் வரவில்லை. இன்று வரை ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. ஆனால் இதைப் பற்றி இன்றைக்கு இருக்கக்கூடிய முதலமைச்சர் வாய் திறந்து பேசுகிறாரா என்றால் இல்லை. அவருக்கு இருக்கக்கூடிய ஒரே கவலை, தி.மு.க. மீது என்ன பொய் வழக்கு போடலாம் என்பது மட்டுமே. எங்குத் தண்ணீர் வருகிறதோ இல்லையோ, அங்கு ”தண்ணீர்” வர வேண்டும் (நான் காவிரியைச் சொன்னேன்)” என பேசியிருந்தார்.
இதையடுத்து முதல்வர் விஜய்யை, உதயநிதி ஸ்டாலின் இழிவாக பேசியதாக அவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் தவெகவினர் புகார் கொடுத்தனர். மேலும் சென்னையில் உள்ள

உதயநிதி ஸ்டாலின் வீடு முன்பாக இன்று காலை முதலே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதனால் உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு திமுக முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சென்றனர். ஆனால் போலீசார்
அவர்களை தடுத்ததால் திமுக முன்னாள் அமைச்சர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திமுகவின் வழக்கறிஞர்களும் போலீசாரால் தடுக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து உதயநிதி வீட்டுக்குள் சென்ற போலீசார், அவரை கைது செய்வதாக தெரிவித்தனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தஞ்சாவூர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி அளித்த புகாரின் பேரில் உதயநிதி ஸ்டாலின் மீது 6 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதனையடுத்து உதயநிதி ஸ்டாலினுக்கு முன்ஜாமீன் பெறுவதற்காக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி அமர்வில் அவரது வழக்கறிஞர்கள் அவசர வழக்காக விசாரிக்க முறையீடு செய்தனர். இதனை தலைமை நீதிபதி தர்மாதிகாரி ஏற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி இளந்திரையன் முன்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு முன்ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர் ஹசன் முகம்மது ஜின்னா மனுத் தாக்கல் செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி இளந்திரையன், பிற்பகலில் இந்த மனு மீது விசாரணை நடைபெறும்; அதுவரை உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என காவல்துறையினருக்கு தெரிவிக்குமாறு அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி இளந்திரையன் தெரிவித்தார். இந்த அறிவுறுத்தலை மீறி உதயநிதி ஸ்டாலினை தஞ்சை போலீசார் கைது செய்தனர். என் மீதான கைது நடவடிக்கையை காமெடியாகவே பார்க்கிறேன். காவிரி பிரச்சனையை மடைமாற்றவே கைது .பயந்தாங்கொள்ளி அரசு இது.. நான் அஞ்ச மாட்டேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, நீலங்கரையில் திமுகவினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் திமுகவினர் போராட்டம் செய்து வருகின்றனர்.
