Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விவசாயியை தலைதுண்டித்து கொன்ற ஆண் கரடி கூண்டில் சிக்கியது

விகே புரம் அருகே விவசாயியை தலை துண்டித்து கொன்ற 8 வயது ஆண் கரடி கூண்டில் சிக்கியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து 20க்கும் மேற்பட்ட கரடிகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

மலையடிவாரத்தில் குடியிருப்பு பகுதிகளான பொதிகையடி, டாணா, அனவன்குடியிருப்பு, அருணாச்சலபுரம், பசுக்கிடைவிளை, அகஸ்தியர்புரம், கருத்தப்பிள்ளையூர், ரவணசமுத்திரம், வடமலைசமுத்திரம், பெத்தான்பிள்ளை குடியிருப்பு, பங்களாகுடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை, இரவில் கரடி தனியாகவோ, கூட்டமாகவோ இரை தேடி நடமாடி வருகிறது.

சாலைகள், தெருக்களில் உலா வந்த கரடிகள் தற்போது வீடுகளுக்குள் புகுந்து வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இரை தேடி அலையும் கரடிகள் ஆக்ரோஷத்தில் சாலையில் செல்வோரை விரட்டுவது மட்டுமின்றி தாக்கியும் வருகிறது. இதுவரை 6க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் கரடிகளை கூண்டு வைப்பது பிடிக்க வேண்டும், இல்லையெனில் உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் வனத்துறையை எச்சரித்து வந்தனர்.

ஆனால் வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கடந்த 31ம்தேதி விகேபுரம் அருகே வடமலைசமுத்திரம் பகுதியில் தோட்டக்காவலாளியான அருணாச்சலபுரத்தைச் சேர்ந்த முருகன் என்பவரை கரடி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். வனத்துறையினர் முன்னிலையில் முருகனின் தலையை துண்டாக்கியது.

இப்பகுதியில் கரடி நடமாட்டம் குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும், கரடியை வனப்பகுதிக்குள் விரட்டாமல் அலட்சியம் காட்டியதால் முருகன் பலியானதற்கு முக்கிய காரணம் என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து கரடியைப் பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டனர். பாபநாசம், கடையம் வனச்சரகம் சார்பில் வடமலைசமுத்திரம் பகுதியில் கரடியை பிடிக்க 4 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டன. ஒவ்வொரு கூண்டையும் 5 பேர் கொண்ட குழுக்கள் இரவு, பகலாகவும், டிரோன் கேமராக்கள் மூலம் வான்வழி கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கால்நடை மருத்துவக்குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர். இந்நிலையில் நேற்று பகல் 1 மணியளவில், சுமார் 8 வயது மதிக்கத்தக்க ஆண் கரடி ஒன்று, வடமலைசமுத்திரம் பகுதியில் தனியார் குளிர்பான நிறுவனம் அருகே வைத்திருந்த கூண்டில் சிக்கியது.

இதை தொடர்ந்து கரடியை, துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் முன்னிலையில் வன கால்நடை மருத்துவர் மனோகரன் மூலம் உரிய முறையில் பரிசோதனை செய்து முண்டந்துறை வனச்சரகம், காரையாறில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், ‘வடமலைசமுத்திரம் பகுதியில் பிடிபட்ட கரடி தான் காவலாளி முருகனை கொன்றதா? என்பது தெரியாது. இப்பகுதியில் மேலும் பல கரடிகள் நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் அனைத்து கரடிகளை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து கரடி நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம்’ என்றார்.

error: Content is protected !!