சமோலி: கனமழை காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்ட ம் பிபல்கோட்டில் டிஎச்டிசி சுரங்கப்பாதைக்குள் வெள்ளநீர் மற்றும் கற்கள் புகுந்த சம்பவத்தில் 7 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
மேலும் 14 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை சுமார் ஆறரை மணியளவில் இந்த கோர விபத்து நிகழ்ந்தது. சமோலி மாவட்டத்தின் பிப்பல்கோட்டி பகுதியில் தெஹ்ரி நீர்மின் மேம்பாட்டுக் கழகம் (THDC) சார்பில் நீர்மின் திட்டத்திற்காக சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் கனமழை காரணமாக அப்பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு மற்றும் கசிவு காரணமாக, சுரங்கத்திற்குள் அதிவேகமாக தண்ணீர் மற்றும் மண்,கற்கள், குப்பைகள் அடித்து செல்லப்பட்டன.அப்போது உள்ளே பணியில் இருந்த தொழிலாளர்கள் நீரோட்டத்தின் வேகத்தால் சுரங்கத்தினுள் வேகமாக அடித்து இழுத்து செல்லப்பட்டனர்.
இது பற்றிய தகவல் தெரிந்ததுமே உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கிய நிலையில் 18 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதே நேரம் 7 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சுரங்கத்துக்குள் புகுந்த மண், கற்கள் மற்றும் இடிபாடுகளை அகற்றி சுரங்கத்தில் சிக்கியுள்ள மேலும் சில தொழிலார்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
