திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாகப் பெய்த தொடர் கனமழை காரணமாக, சுமார் 500 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன. டெல்டா மாவட்டங்களில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகப் பெய்து வரும் திடீர் மழையால், திருவாரூர் மாவட்டத்தின் நன்னிலம், எரவாஞ்சேரி, பேரளம் மற்றும் ராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்கள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன.
இதில் கதிர்கள் முற்றி, இன்னும் சில நாட்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் சாய்ந்து மூழ்கின. பயிர்களைக் காக்கக் கடுமையான உழைப்பையும் முதலீட்டையும் கொட்டிய தங்களுக்கு, அறுவடை நேரத்தில் பெய்த இந்த மழை மொத்த உழைப்பையும் வீணடித்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, பாதிக்கப்பட்ட விளைநிலங்களை வேளாண்மை மற்றும் வருவாய்த்துறையினர் உடனடியாக நேரில் பார்வையிட்டு, சேத விவரங்களைத் துல்லியமாகக் கணக்கிட வேண்டும் எனப் பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்குத் தமிழக அரசு உரிய இழப்பீட்டை விரைவில் வழங்கி உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
