மலையாள நடிகர் தேவன், தான் டிவிகே (TVK) கட்சியில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார். பாஜகவின் தொலைநோக்குப் பார்வையில் தனக்கு அதிருப்தி இருப்பதாகவும், இனி அக்கட்சியுடன் தொடர்ந்து பயணிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மலையாள நடிகர் தேவன், “நான் விரைவில் தவெகவில் இணைய உள்ளேன். பாஜகவில் நீடிப்பதன் மூலம் ஒரு அரசியல்வாதியாக எனது லட்சியத்தை நிறைவேற்ற முடியாது என்று கருதினேன். இதனால் நான் பாஜகவில் இருந்து ராஜினாமா செய்தேன். இதைப் பார்த்த விஜய் எனக்குத் தவெகவில் இணைய விருப்பமா என்று கேட்பதற்காகச் சிலரை என்னிடம் அனுப்பி வைத்தார். எங்களுக்கிடையே மிகவும் விரிவான மற்றும் சுவாரஸ்யமான கலந்துரையாடல் நடைபெற்றது. இறுதியாக, சென்னையில் உள்ள தவெகவின் மூத்த தலைவர்களுடன் நான் ஒரு ஆன்லைன் கூட்டத்தில் பங்கேற்றேன். அப்போது தவெகவில் இணைய சம்மதம் தெரிவித்தேன். எனவே, நான் விஜய்யைத் தனியாகச் சந்தித்துப் பேச வேண்டும் என்று அவர்களிடம் கூறினேன். அதன்பிறகு, அவரைச் சந்திப்பதற்காக செப்டம்பர் 10ம் தேதியை அவர்கள் எனக்குக் கொடுத்துள்ளனர். அந்தச் சந்திப்பு வாய்ப்பிற்காக நான் காத்திருக்கிறேன். இறைவனின் அருளால், நான் தவெகவில் இணைந்திருப்பேன். அவர்கள் எனக்கு மாநில தலைவர் பதவியை வழங்க முடிவு செய்துள்ளனர்” என்றார்.
காங்கிரஸ் ஆளும் கேரள மாநிலத்தில் தவெக கட்சி மலையாள நடிகர் தேவன் தலைமையில் இயங்கும். தேவன் இதற்கு முன்பு பாஜகவில் இருந்தார். இப்போது தவெக கட்சியை கேரளாவில் அமைக்கும் முயற்சிக்காக பாஜகவில் இருந்து ராஜினாமா செய்து வந்திருக்கிறார். தமிழ்நாட்டை போலவே கேரளாவிலும் பாஜக நேரடியாக தேர்தலில் வெல்ல முடியாத சூழல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
