Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடிக்கு உயரிய விருது

உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடிக்கு உயரிய விருது

உஸ்பெகிஸ்தான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இரு நாள் அரசு முறை பயணமாக உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி தாஷ்கண்டில் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் உடன் உயர்மட்டப் பிரதிநிதிகள் குழு அளவிலான ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, இரு நாடுகளின் பொருளாதார உறவை மேம்படுத்தவும், வணிகத் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டை நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது. குறிப்பாக, இந்தியாவிற்கு நீண்ட கால அடிப்படையில் யுரேனியம் விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கியத் தீர்மானங்கள் எட்டப்பட்டன. மேலும், மூன்று சகோதர நகர ஒப்பந்தங்கள் கையெழுத்தானதுடன், குஜராத்தின் கிஃப்ட் சிட்டி மற்றும் உஸ்பெகிஸ்தானின் ‘நியூ தாஷ்கண்ட்’ போன்ற மெகா திட்டங்களில் தொழில்நுட்பப் பகிர்வை முன்னெடுக்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி, இருதரப்பு கூட்டு ஆணையக் குழு, அமைச்சர் நிலைக்கு உயர்த்தப்படும் என்றும், வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். இதே போல பிரதமர் மோடி தலைமையின்கீழ் இந்தியா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெறுள்ளதாக உஸ்பெகிஸ்தான் அதிபர் புகழாரம் சூட்டினார். மேலும், AI, விண்வெளி ஆய்வு உள்ளிட்டவற்றில் இந்தியா சரித்திரம் படைப்பதாகவும் பாராட்டு தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு உஸ்பெகிஸ்தானின் உயரிய விருது வழங்கி, அந்நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் கௌரவித்தார். உஸ்பெகிஸ்தானின் உயரிய விருதைப் பணிவுடன் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்த உயரிய கவுரவத்தை இரு நாடுகளுக்கும் இடையிலான பல நூற்றாண்டு கால நட்புறவுக்கும், வரலாற்றுப் பாரம்பரியத்திற்கும் மனதார அர்ப்பணிப்பதாகக் கூறினார். இது பிரதமர் நரேந்திர மோடிக்கு பிற நாடுகளால் வழங்கப்படும் 36-வது சர்வதேச விருதாகும்.

error: Content is protected !!