தமிழக முதல்வராக இருக்கும் விஜய்க்கு, நாட்டின் பிரதமராகும் எண்ணம் துளியும் இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும் என்றார்.
முன்னதாக சமீபத்தில் வெளியான தேசிய அளவிலான கருத்துக்கணிப்பு ஒன்றில், நாட்டின் அடுத்த பிரதமர் வேட்பாளருக்கான ரேஸில் தவெக தலைவர் விஜய் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து தவெக நிர்வாகிகள், அமைச்சர்கள் சிலர் விஜய் தான் வருங்கால பிரதமர் என்பது போல் கருத்துக்களை பொதுவெளியில் பேசி வந்தனர்.
இது குறித்து பேசிய காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார், ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் பொறுப்புகளை துறக்க தயாராவோம், காங்கிரசை சேர்ந்த 2 அமைச்சர்களும் ராஜினாமா செய்வோம் என்றார். விஜய் பிரதமர் என்ற விவகாரம் காங்கிரஸ் – தவெக இடையே மோதலை ஏற்படுத்தி வரும் நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வைகோ கருத்து தெரிவித்து உள்ளார்.
“நாட்டின் பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் முதலமைச்சர் விஜய்க்குத் துளியளவும் கிடையாது. அந்தக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் யோசித்துப் பேச வேண்டும். இந்திய அளவில் காங்கிரஸ் கட்சிதான் தலைமையாக இருக்கிறது. அந்த அணியின் வேட்பாளரை தான் பிரதமர் வேட்பாளராக நிறுத்த முடியும். எனவே ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும். வேறு வழியே கிடையாது” என்று வைகோ குறிப்பிட்டுள்ளார்.
