Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பத்திரிகையாளர்களை தாக்குவது ஜனநாயகத்தின் குரலை நசுக்குவதற்கு சமம்

பத்திரிகையாளர்களை தாக்குவது ஜனநாயகத்தின் குரலை நசுக்குவதற்கு சமம் என்று ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ இன்று வெளியிட்ட அறிக்கை: டெல்லி முதல்வர் ரேகா குப்தாவிடம் கேள்வி எழுப்பியதற்காக பத்திரிகையாளர்கள் ஷாஹீன் மற்றும் நஃபிசா ஆகியோர் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன். குறிப்பாக, தங்களது மத அடையாளம் தெரிந்த பின்னர் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டதாக சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர்கள் தெரிவித்திருப்பது மிகவும் தீவிரமான குற்றச்சாட்டாகும்.

இது உண்மையாக இருப்பின், காவல்துறையின் சட்டவிரோத நடவடிக்கை மட்டுமல்ல; மதப் பாகுபாட்டையும், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் கேள்விக்குள்ளாக்கும் செயல் ஆகும். அரசிடம் கேள்வி கேட்பதும், அதிகாரத்தில் இருப்பவர்களிடம் விளக்கம் கோருவதும் பத்திரிகையாளர்களின் ஜனநாயகக் கடமை. அந்தக் கேள்விகளை எதிர்கொள்ளாமல், கேள்வி கேட்டவர்களையே காவல்துறையின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அச்சுறுத்துவதும் தாக்குவதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா உள்ளிட்ட ஊடக அமைப்புகளின் தலையீட்டுக்குப் பின்னர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டை மீண்டும் காவல்துறையினரே விசாரிப்பது மட்டும் போதாது. இத்தாக்குதல் சம்பவம் குறித்து சுயாட்சியான, வெளிப்படையான மற்றும் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மத அடிப்படையிலான பாகுபாடு நடைபெற்றிருந்தால், அதற்கும் உரிய நடவடிக்கை அவசியம். பத்திரிகை சுதந்திரம் என்பது பத்திரிகையாளர்களின் தனிப்பட்ட உரிமை அல்ல; அது மக்களின் உண்மையை அறியும் உரிமை. கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதன் மூலம் ஜனநாயகத்தின் குரலை ஒருபோதும் ஒடுக்க முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!