கேரள: தமிழக-கேரள எல்லைப் பகுதியான அட்டப்பாடியில், சாக்கு மூட்டைகளில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அட்டப்பாடி அருகே பவானி ஆற்றுப் பகுதியில் சிலந்திப் பாறைகள் அமைந்துள்ள பகுதியில், நேற்று காட்டுக்குச் சென்ற சில தொழிலாளர்கள் இரண்டு சாக்கு மூட்டைகள் கிடந்ததை கண்டனர். அவை சந்தேகத்திற்கிடமாக இருந்ததால், உடனடியாக அகளி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சாக்கு மூட்டைகளைப் பிரித்து சோதனை செய்தனர். அப்போது, அவற்றில் இரண்டு சடலங்கள் இருப்பது தெரியவந்தது. உடல்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, இரண்டு சாக்கு மூட்டைகளில் தனித்தனியாக கட்டப்பட்டு பவானி ஆற்றில் வீசப்பட்டிருந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, அந்தப் பகுதியில் சமீபத்தில் காணாமல் போனவர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் இருந்து யாரேனும் தப்பிச் சென்று வெளியூர்களில் தஞ்சமடைந்துள்ளார்களா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மீட்கப்பட்ட இரண்டு சடலங்களையும் போலீசார் ஆய்வு செய்தபோது, அவை இரண்டும் பெண் சடலங்கள் என்பது தெரியவந்தது. அதில், ஒரு பெண்ணுக்கு சுமார் 30 வயதும், மற்றொரு சடலம் சுமார் 5 வயது உடைய பெண் குழந்தை என்பதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
பின்னர், பவானி ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு சடலங்களும் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த கொலைகளை யார் செய்தார்கள், எதற்காக இருவரையும் கொலை செய்து உடல்களை துண்டு துண்டாக வெட்டி சாக்கு மூட்டைகளில் கட்டி ஆற்றில் வீசினார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இரண்டு பெண் சடலங்கள் சாக்கு மூட்டைகளில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அட்டப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
