செங்கல்பட்டு அருகே திம்மாவரம் பகுதியில் புதிதாக லேஅவுட் அமைக்கப்பட்டு, அங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் புதிதாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். இதே பகுதியில் ஸ்ரீராம் என்பவரும் சொந்தமாக வீடு கட்டி வசித்து வந்துள்ளார்.
இக்குடியிருப்பு பகுதியில் உள்ள பிரதான சாலையின் அகலம் 23 அடி. எனினும், அங்குள்ள வீட்டின் உரிமையாளர்களில் பலர், தங்களது கார்களை போர்டிகோவில் எளிதாக ஏற்றி செல்லும் வகையில், தங்களின் வீட்டுக்கு முன்பிருந்த 23 அடி சாலையில் பாதியை ஆக்கிரமித்து, சிமென்ட் ராம்ப்புகளை அமைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் எளிதாக வாகனங்களை இயக்க முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
திம்மாவரம் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள இத்தகைய இரும்பு ராம்ப்களால் அப்பகுதி மக்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படுவதாக, அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், தனது பகுதியில் போக்குவரத்தை முடக்கும் வகையில் அமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு ராம்ப்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக அகற்ற உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், திம்மாவரத்தில் 23 அடி சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள அனைத்து இரும்பு ராம்ப்புகளை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என்று செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அதிகாரப்பூர்வ கடிதம் மூலம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின்பேரில், திம்மாவரம் பகுதிக்கு நேற்று மாலை செங்கல்பட்டு தாசில்தார் தலைமையில் வருவாய்த்துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் ஜேசிபி இயந்திரத்துடன் விரைந்து சென்றனர். திம்மாவரத்தில் 23 அடி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த அனைத்து ஆக்கிரமிப்புகளையும் ஜேசிபி இயந்திரம் மூலமாக இடித்து அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
