தாம்பரம் அடுத்த வண்டலூரைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் ‘கலைமணி அசோசியேட்ஸ்’ என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்திற்கு தாம்பரம் வணிகவரித்துறை அலுவலகத்தில் இருந்து ஜிஎஸ்டி டிஆர்சி-1 தொடர்பான முரண்பாட்டு அறிவிப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து, அந்த அறிவிப்பு தொடர்பாக உரிய பதில் மற்றும் விளக்கங்களை சிவக்குமார் தாம்பரம் வணிகவரித்துறை அலுவலகத்தில் சமர்ப்பித்திருந்தார்.
இந்நிலையில், முரண்பாட்டு அறிவிப்பு தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க, தாம்பரம் மதிப்பீட்டு வட்டம், வணிகவரித்துறை அலுவலக உதவி ஆணையர் ஜமுனா, சிவக்குமாரிடம் ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. பின்னர், ரூ.1.75 லட்சமாக குறைத்துக் கொடுக்குமாறு ஜமுனா வற்புறுத்தியதாக தெரிகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத சிவக்குமார், இதுகுறித்து சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையில் புகார் அளித்தார்.
அதன்பேரில், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகள், நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சிவக்குமாரிடம் இருந்து ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற உதவி ஆணையர் ஜமுனாவை கையும் களவுமாக கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
