தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே காதல் திருமணம் செய்த மகள் மற்றும் மருமகனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்ற பெண்ணின் தந்தையை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்பவரும், நெல்லை மாவட்டம் அரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் தனித்தனியாக வேலை செய்து வந்த நிலையில், சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இவர்கள் காதலித்தபோதும், திருமணம் செய்துகொண்ட பிறகும், பெண்ணின் தந்தையான முருகன் தனது மகள் மீது கடும் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டதால் அவர் ஆத்திரத்தில் இருந்ததாகவும் தெரிகிறது.
