கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள்.
கரூர் மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக அமராவதி ஆற்றில் தண்ணீர் இன்றி விவசாயிகள் கடும் அவதியடைந்து வந்தனர்.
கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் , அமராவதி அணையில் இருந்து குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்காக 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதனிடையே, நீதிமன்ற உத்தரவையடுத்து கடந்த வாரம் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

ஆனால், தண்ணீர் கரூர் நகரப் பகுதியில் உள்ள ஆண்டாங்கோவில் தடுப்பணை வரை மட்டுமே வந்ததாகவும், அதன்பிறகு தண்ணீர் வரத்து நின்றுவிட்டதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இன்று காலை 6 மணி நிலவரம் படி அமராவதி அணையிலிருந்து 465 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு அப்பால் உள்ள அமராவதி ஆற்றுப்பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுவதாகவும், குடிநீர் தேவையும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும், கடைமடை பகுதிகளான பசுபதிபாளையம், வெள்ளாளப்பட்டி, வடக்குப்பாளையம், புலியூர் உள்ளிட்ட ஆறு கிராமங்களுக்கு தண்ணீர் சென்றடையவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வாகனத்தையும் விவசாயிகள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அமராவதி அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறந்து, கடைமடை பகுதிகள் வரை தண்ணீர் சென்றடைய மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
