Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருத்தணி ஒன்றிய பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தீவிரம்

திருத்தணி ஒன்றிய பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தீவிரம்

திருத்தணி: டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், திருத்தணி பகுதியில் காய்ச்சல் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் பருவகால மாற்றம் மற்றும் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், சுகாதாரத்துறை சார்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. திருத்தணி ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகளில் சாதாரண காய்ச்சல் மற்றும் டெங்கு தடுப்பு பணிகள் வட்டார மருத்துவ அலுவலர் கலைவாணி தலைமையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதராத்துறையினர் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள், ஊராட்சி துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து தூய்மை மற்றும் சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஆர்.வி.என்.கண்டிகையில் நேற்று சிறப்பு சுகாதார முகாம் நடைபெற்றது. மருத்துவ அலுவலர் டாக்டர் ராகுல் தலைமையில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் கிராம மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் மருந்து, மாத்திரை வழங்கப்பட்டது. கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாக சென்று கொசு மருந்து அடித்தும், தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

வீடுகளுக்கு அருகில் தேவையற்ற டயர், பிளாஸ்டிக் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டது. தண்ணீர் டேங்குகளை தூய்மைப்படுத்தி குளோரின் செய்யப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் மழை தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், நிலவேம்பு கசாயம் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மாவட்ட இளநிலை பூச்சியியல் நிபுணர் அருண்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முரளி, சுகாதார ஆய்வாளர்கள் பாலசுந்தரம், தமிழரசன் உட்பட சுகாதாரத்துறையினர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!