கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேற்கு புறவழிச்சாலையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் அபாயகரமாக இருசக்கர வாகனங்களில் ‘வீலிங்’ (Wheeling) செய்த 4 பேரைப் பேரூர் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்து உள்ளனர்.
கோவை, பேரூர் எல்லைக்கு உட்பட்ட மேற்கு புறவழிச்சாலையில் இளைஞர்கள் சிலர் தங்களது உயிரையும், சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டிகளின் உயிரையும் பணையம் வைத்து ஆபத்தான முறையில் பைக் வீலிங் மற்றும் அதிவேகச் சாகசங்களில் ஈடுபட்டு வருவதாகக் காவல் துறையினருக்குத் தொடர் புகார்கள் வந்தன.
இதனை அடுத்து பேரூர் காவல் நிலையப் போலீஸார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது வீலிங்கில் ஈடுபட்ட 4 பேரைக் காவல் துறையினர் மடக்கிப் பிடித்துக்

கைது செய்தனர். மேலும், அவர்கள் சாகசத்திற்குப் பயன்படுத்திய 4 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, பேரூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இச்சம்பவத்தின் போது காவல் துறையைக் கண்டதும் தப்பியோடிய மேலும் 3 இருசக்கர வாகனங்களின் பதிவு எண்களைக் கொண்டு, அவற்றின் முகவரிகளைக் கண்டறிந்து தப்பியோடிய நபர்களைப் பேரூர் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 4 நபர்களும் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் என்பதால், அவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ளாமல் இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதற்காக, அவர்கள் படிக்கும் கல்லூரி நிர்வாகத் தொடர்புகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்குக் கல்லூரியில் இருந்து மாற்றுச் சான்றிதழ் (TC) வழங்கி நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகள் ஆவண செய்து வருகின்றனர்.
பேரூர் காவல் நிலையப் போலீஸார் தினமும் மேற்கு புறவழிச்சாலையில் தொடர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர்.
இனிவரும் காலங்களில் இதுபோன்று பைக் வீலிங் மற்றும் அதிவேகப் ரேஸிங்கில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு ஓட்டுநர் உரிமம் (Driving License) நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும், கல்லூரி மாணவர்களாக இருந்தால் கல்லூரியில் இருந்து டிசி (TC) வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேரூர் காவல் துறையினர் மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
