பொதுக் கழிப்பிடத்தை திறக்கக் கோரி பேரூராட்சி அலுவலகத்தை பூட்ட முயன்ற பொதுமக்கள் – போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியில், பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த பொதுக் கழிப்பிடம், நில உரிமை தொடர்பான வழக்கு காரணமாக பேரூராட்சி நிர்வாகத்தால் பூட்டப்பட்டு, மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கழிப்பிட வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.
இந்நிலையில், பொதுக் கழிப்பிடத்திற்கு மீண்டும் மின் இணைப்பு வழங்கி, உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கம், சி.பி.எம். மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறி.
இதையடுத்து, ஊர்வலமாக பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்ற போராட்டக்காரர்கள், அலுவலகத்திற்கு பூட்டு போட முயன்றனர்.
அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து சிறிது நேரம் தள்ளுமுள்ளும் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
தங்களது கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என தெரிவித்த போராட்டக்காரர்கள், பேரூராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
