கரூர்:22.09.2026
கலப்பு திருமணம் செய்த இளம் பெண்ணை கருக்கலைப்பு செய்து விட்டுச் சென்ற கணவர் மற்றும் அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்.
கரூரில், கல்லூரியில் படிக்கும் போது காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்ட நிலையில், தன்னை கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தி, கணவர் தனியாக விட்டுச் சென்றதாக இளம் பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே காக்கையம்பட்டியைச் சேர்ந்த முத்துலட்சுமி, காணப்பட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தபோது, அதே கல்லூரியில் படித்த கார்த்திக் என்பவரை காதலித்துள்ளார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில், சென்னைக்குச் சென்று திருமணம் செய்து கொண்டு, சுமார் ஓராண்டு காலம் ஒன்றாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், முத்துலட்சுமி கர்ப்பமானதாகவும், கார்த்திக்கின் பெற்றோர் அவரை தொடர்பு கொண்டு கருவைக் கலைத்துவிட்டு தங்களுடன் வந்து விடுமாறு கூறியதாகவும்.
தொடர்ந்து, கார்த்திக் தன்னை கருக்கலைப்பு செய்ய வைத்துவிட்டு தனியாக விட்டுச் சென்றதாகவும், அவரை தொடர்பு கொண்டபோது கார்த்திக்கின் பெற்றோர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் முத்துலட்சுமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முத்துலட்சுமி புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் கார்த்திக் மற்றும் அவரது பெற்றோர் என மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டும் இதுவரை கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறி, முத்துலட்சுமி தனது வழக்கறிஞருடன் கரூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளார்.
கணவர் மற்றும் அவரது பெற்றோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தமக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
