தஞ்சை அருகே பாத்திரக்கடையில் பொருட்கள் கேட்பது போல் கடை உரிமையாளரின் மனைவி கவனத்தை திசை திருப்பி கல்லா பெட்டியில் இருந்து ரூ.1.75 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கி.நடேசன் (48). இவர் மாரியம்மன் கோவில் மெயின்ரோடு பகுதியில் பாத்திரக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 22ம் தேதி நடேசன் தனது மனைவி கல்பனாவை கடையை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டார் . அப்போது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் பாத்திரக்கடைக்கு சென்று கல்பனாவிடம் கல்யாண பாய் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
இதையடுத்து கல்பனா கொஞ்சம் காத்திருங்கள். நான் கடையின் மாடிக்கு சென்று எடுத்து வருகிறேன் எனக்கூறிவிட்டு கல்யாண பாயை எடுக்க கடையின் மாடிக்கு சென்றுள்ளார். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த மர்ம நபர்கள் கடை கல்லா பெட்டியில் இருந்து ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் பணத்தை திருடிக் கொண்டு பைக்கில் தப்பி சென்றுவிட்டனர்.
மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த கல்பனா கல்யாண பாய் கேட்டவர்களை காணாமல் தேடி பார்த்துள்ளார். பின்னர் கல்லா பெட்டியை பார்த்தபோது பணம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடன் இதுகுறித்து தனது கணவர் நடேசனுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
