கனரா வங்கி பணியாளர்கள் சங்க (தமிழ்நாடு) 4-வது மாநில மாநாடு அருண் ஓட்டலில் இன்று நடந்தது. கனரா வங்கி பணியாளர்கள் சங்க தலைவர் சிவலிங்கம் மாநாட்டு கொடியை ஏற்றிவைத்து தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சுரேஷ் தொடக்க உரை நிகழ்த்தினார். கனரா வங்கி பணியாளர் சங்க செயலாளர் வெங்கடேஷ்,
பிஇஎப்ஐ தமிழ்நாடு பொதுச் செயலாளர் சுனில்குமார், இணைச் செயலாளர் புவனேஸ்வரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டில் வங்கி துறையில் வாரம் 5 வேலை நாட்கள் பணியினை அமல்படுத்த வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை மேம்படுத்த வேண்டும். தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வங்கி பெண் ஊழியர்களுக்கான அடிப்படை கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். வங்கி பணிகளில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஊதிய பாகுபாடுகளை களைய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் கனரா வங்கி பணியாளர் சங்க மாநிலச் செயலாளர் பிரேமலதா நிருபர்களிடம் கூறும்போது…
வாரத்தில் 5 நாள் வேலை என்று கோரிக்கைக்காக இந்திய வங்கித் துறையில் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் யு.எப்.பி. யு. என்ற ஒரே அமைப்பின் கீழ் ஒன்று திரண்டு போராடுவதை கண்டு மத்திய அரசு அச்சமடைந்துள்ளது இதனால் போராட்டத்தை முடக்கும் நோக்கில் ஞாயிற்றுக்கிழமை அன்று வங்கி ஊழியர்களை வேலைக்கு வரச் சொல்லி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இதனால் ஊழியர்களின் போராட்ட உணர்வை அசைக்க முடியாது. வாரத்தில் ஐந்து நாள் வேலை என்பது புதிய கோரிக்கை அல்ல 2015 ஆம் ஆண்டு முதல் வலியுறுத்தப்பட்டு வருகிறது. கோரிக்கையை வென்றெடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்றார்.
