வாரத்துக்கு 5 நாள் வேலை என்பதனை உறுதி செய்திட வேண்டும், ஓய்வூதியபயன்கள் முறையாக வழங்கிட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும், தற்காலிக ஊழியர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நாளைமுதல் 30-ந்தேதி வரை நாடு முழுவதும் 3 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர், இந்த வேலை நிறுத்தம் தொடர்ச்சியாக, வங்கி சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், வங்கி வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாமல் தடுக்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று வங்கிகள் இயங்கும் என மத்திய அரசு அறிவித்தது.
இதேபோன்று, வேலை நிறுத்தத்துக்கு முன்பு அத்தியாவசிய வங்கி பரிவர்த்தனைகளை முடித்துக்கொள்ளுமாறு வங்கிகளும் வாடிக்கையாளர்களை அறிவுறுத்தி உள்ளன. மேலும் பண தேவைகளுக்கு தங்கள் வங்கிகளின் ஏ.டி.எம். மையங்கள் மற்றும் இன்டர்நெட் பேங்கிங், யு.பி.ஐ. உள்ளிட்டவற்றை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளன.
அதன்படி திருச்சியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை ஆன இன்றும் வழக்கம் போல செயல்பட்டது, ஏற்கனவே மத்திய அரசு சார்பில் அறிவிப்பு விடுக்கப்பட்டநிலையில், ஏராளமான வங்கி வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தவும், பணம் எடுக்கவும் மேலும் வங்கி சேவையை பயன்படுத்துவதற்காக வங்கிகளில் குவிந்தனர்.இதனால் வங்கிகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது.
