கரூர் அருகே புதிய அடுக்குமாடி வீடுகளை உடனடியாக ஒப்படைக்கக் கோரி 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு.
கரூர் மாவட்டம் தெற்கு கோலந்தானூர், பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த அடுக்குமாடி மக்கள் நல்வாழ்வு நலச்சங்கத்தினர், புதிய வீடுகளை விரைந்து ஒப்படைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கோலந்தானூர் பகுதியில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த 125 குடும்பங்கள், குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்ட வீடுகளில் வசித்து வந்தனர்.
இந்த வீடுகள் பழுதடைந்த நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 10-ஆம் தேதி

இடிக்கப்பட்டன. அதே இடத்தில் புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உறுதியளித்திருந்தது.
தற்போது புதிய அடுக்குமாடி வீடுகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடித்து வீடுகளை உடனடியாக தங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளாக வாடகை வீடுகளில் வசித்து வருவதால், வாடகை செலுத்த முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், பல மாதங்களாக மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மனு கொடுக்க வந்த பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்தி மூன்று நபர்கள் மட்டும் உள்ளே செல்ல வேண்டும் என்று கூறியதால் போலீசாரிடம் வாக்குவாதத்தை ஈடுபட்டனர் பின்னர் மூன்று நபர்கள் மட்டும் உள்ளே சென்று கோரிக்கை மனு வழங்கினார்.
