Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மேகதாது விவகாரம்- அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த கிறிஸ்டோபர் திலக் எம்பி கோரிக்கை

மேகதாது விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் இணைந்து ஆலோசிக்க வேண்டும்; தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் – கிறிஸ்டோபர் திலக் எம்பி பேட்டி

நேஷனல் ரியல் எஸ்டேட் டெவலப்மென்ட் கவுன்சில் (NAREDCO) தமிழ்நாடு தெற்கு சார்பில், ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிமுறைகள் (CDBR) தொடர்பான சமீபத்திய மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் குறித்த கருத்தரங்கம் திருச்சி ராஜா காலனி பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.
கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

இந்த கருத்தரங்கில் CDBR விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள், திருத்தங்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள அம்சங்கள் குறித்து விளக்கங்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இதில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையைச் சேர்ந்தவர்கள், தொழில்துறை பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் கிறிஸ்டோபர் திலக் எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நேற்று நாடாளுமன்றத்தில் வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் பங்களிப்பு நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள கூட்டு நாடாளுமன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இந்தியாவில் மிக முக்கியமான அரசியலமைப்பு அமைப்புகளில் தேர்தல் ஆணையமும் ஒன்று. ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்கும் தேர்தல்கள் முறையாக நடைபெறுகிறதா என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.
தற்போது எஸ்.ஐ.ஆர் பணியின் மூன்றாம் கட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் ஏற்பட்டதாக கூறப்படும் குளறுபடிகள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இந்தச் சூழலில், நேற்று காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அதில் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் எஃப்.சி.ஆர்.ஏ. தொடர்பாக பேசினோம். இந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகுவது தொடர்பாகவும் பேசுவோம்.

தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்வதற்கு முன்பு பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி இடம்பெற்ற தேர்வுக்குழு இருந்தது. தற்போது அதில் உள்துறை அமைச்சரும் இடம்பெறும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கூலிப்படையாக செயல்பட்டு வருகிறார். இதனால் அண்மையில் நடைபெற்ற தேர்தல்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் எழுகின்றன.

இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் கருத்து தெரிவிக்க வேண்டும் என திமுக தலைவர்கள் கூறி வருகின்றனர். அவர்கள் எதிர்க்கட்சியாக அரசியல் செய்ய வேண்டிய நிலையில், யார் என்ன பேசினாலும் முதல்வர் கருத்து தெரிவிக்கிறாரா என பார்த்துக் கொண்டிருப்பது திமுகவினரின் வேலையாக உள்ளது. முதல்வர் அனைத்து விவகாரங்களுக்கும் உடனடியாக கருத்து தெரிவிப்பவர் அல்ல. பொறுமையாகவும், நிதானமாகவும் விஷயங்களை உள்வாங்கிக் கொண்டு பின்னர் கருத்து தெரிவிப்பார். அவர் தற்போது கருத்து தெரிவித்தாலும், தெரிவிக்காவிட்டாலும் அதனால் பெரிய மாற்றம் ஏற்படப்போவதில்லை. அவர் நிதானமாக தனது கருத்தை தெரிவிப்பார் என நினைக்கிறேன்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் குறித்து கனிமொழி எம்.பி. ஒரு பெண்ணாக தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார். நமது சமூகத்தில் இன்னும் பல பிற்போக்குத்தனமான சென்டிமென்ட் சார்ந்த விஷயங்கள் தொடர்ந்து நிலவி வருகின்றன. சில விஷயங்களை உடனடியாக மாற்ற முடியாவிட்டாலும், ஒரு குறிப்பிட்ட அளவில் மக்கள் கவனத்தை ஈர்ப்பதற்கும், ஒரு நல்ல தோற்றத்தை உருவாக்குவதற்கும் இதுபோன்ற திட்டங்கள் தேவைப்படுகின்றன.

ஆபாசமான பேச்சும், திமுகவின் பிரச்சாரமும் என்றைக்குமே பிரிக்க முடியாதவை. உதயநிதி ஸ்டாலின், கலைஞரைப் போல தனது பேச்சாற்றலை வெளிப்படுத்துவார் என எதிர்பார்த்தோம். ஆனால் அவர் இரட்டை அர்த்தத்தில் பேசுவதையே திமுகவின் பாரம்பரியம் என்ற பாணியில் உருவாக்கி வருகிறார். குறிப்பாக பெண்கள் மத்தியில் இதுபோன்ற பேச்சுகள் வரவேற்கத்தக்கவை அல்ல. தாராபுரம் தொகுதியில் தற்போது அனைத்து வேட்பாளர்களும் பெண்களாக உள்ளனர். ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இதுபோன்று பேசுவதால் ஒட்டுமொத்த அரசியலின் தரம் குறைந்து விடுகிறது. இரட்டை அர்த்தத்தில் பேசுவதால் சட்டப்பேரவையின் மாண்பு குறையும் எனக் கூறியவர்கள், தற்போது பிரச்சாரத்தில் அதுபோன்று பேசுகின்றனர். இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு இது பிடிக்கவில்லை. எனவே இது திமுகவுக்கு பிரச்சினையாக முடியும்.

காவிரி விவகாரத்தில் கடைசியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தண்ணீர் திறந்து விடப்பட்டது. காவிரி விவகாரத்தைத் தொடர்ந்து கண்காணிப்பதற்காக ஒரு சிறிய குழுவை அமைத்து, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பது எனது கருத்து. எங்கள் கட்சியிலும் இது தொடர்பாக பேசியுள்ளோம். இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் இது குறித்து விரிவாகப் பேசுகிறேன்.

இடைத்தேர்தலில் காங்கிரஸ் தலைவர்கள் பிரச்சாரம் செய்வார்கள். தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் முதல்வரும் தற்போது பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரம் தீவிரமடையும் நிலையில் கள நிலவரங்கள் மாறும். ஆரம்பத்தில் பிரச்சாரத்தில் சிறிய அளவில் ஒருங்கிணைப்புக் குறைபாடு இருந்தது. பின்னர் தொகுதி பொறுப்பாளர் மற்றும் எங்களது அமைச்சர் ராஜேஷ்குமார் ஆகியோர் பேசி அந்தப் பிரச்சினையை சரி செய்துவிட்டனர்.

இடைத்தேர்தலில் பணம் வழங்கப்படுவதாக கூறப்படுவது குறித்து ஆதாரம் இல்லாமல் என்னால் பேச முடியாது. சிலர் பொதுமக்களிடம் பணம் கொடுத்து இதுபோன்ற கருத்துகளைப் பேச வைக்கக்கூடும்.

தமிழ்நாட்டில் பாஜக எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காகத்தான் காங்கிரஸ் முதலில் சென்று தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்க முன்வந்தது. பாஜக எங்கு இடம் கிடைத்தாலும் அங்கு நுழைந்து அதை பெரிதாக்கி, தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்பதில் தீவிரமாக உள்ளது. அதனால் பாஜக குறித்து ஒரு அச்சம் உள்ளது. ஆனால் அவர்களுடன் கைகோர்த்து அரசு செயல்படுகிறது என்று கூற முடியாது. மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் ஒரு பணியுறவு இருந்துதான் ஆக வேண்டும். அது இல்லாமல் அரசை நடத்த முடியாது. அந்தப் பணியுறவை வைத்திருப்பதை, கைகோர்த்து செயல்படுவதாகக் கூறக்கூடாது.

மேகதாது விவகாரத்தில் கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டி பேசியுள்ளார். அதுபோல தமிழகத்திலும் அனைத்து கட்சிகளையும் அழைத்து ஆலோசனை நடத்த வேண்டும். அனைத்து கட்சியினரும் ஒன்றாக அமர்ந்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும். அது நடைபெறாத வரை ஒவ்வொருவரும் மாறி மாறி அரசியல் கருத்துகளைத் தெரிவித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு திமுக கலந்து கொள்ளாது. கூட்டம் நடத்துவதற்கான முயற்சியை நாங்கள் மேற்கொண்டு, திமுகவுக்கு அழைப்பு விடுத்தோம். ஆனால் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்தார்.

error: Content is protected !!