ஆந்திராவில் இருந்து கருவாடு லாரியில் கஞ்சா கடத்தல் திருச்சி சமயபுரத்தில் 5 பேர் கைது – ரூ.25 லட்சம் மதிப்புள்ள கஞ்சா, வாகனங்கள் பறிமுதல்!…
ஆந்திர மாநிலத்திலிருந்து கருவாடு ஏற்றி வந்த லாரியில் இரகசியமாகப் பதுக்கி கடத்தி வரப்பட்ட சுமார் 22 கிலோ கஞ்சாவைச் சமயபுரம் காவல்துறையினர் பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட 5 பேரைக் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கருவாடு லோடு ஏற்றி வந்த ஈச்சர் லாரி ஒன்றில் சுமார் 50 கிலோ கஞ்சா கடத்தப்படுவதாகத் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு (SP) இரகசியத் தகவல் கிடைத்தது. அந்த லாரியிலிருந்து முதற்கட்டமாக 27 கிலோ கஞ்சா திண்டிவனத்தில் விற்பனைக்காக இறக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள கஞ்சாவுடன் லாரி திருச்சி நோக்கி வந்து கொண்டிருப்பதாகத் தெரியவந்தது.....
இதையடுத்து, மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில் சமயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் குணசேகரன் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் முரளி சுரேஷ், சரவணன் சுமன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் சமயபுரம் எல்லைக்கு உட்பட்ட முக்கியச் சாலைகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்....
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சமயபுரம் நால்ரோடு பகுதிக்கு செல்லும் சர்வீஸ் சாலையில், ரெட்டியார் மஹால் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஈச்சர் லாரியைப் போலிசார் மறித்து விசாரணை நடத்தினர். அப்போது லாரியில் இருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால், சந்தேகமடைந்த போலிசார் லாரியை முழுமையாகச் சோதனை செய்தனர்….
அச்சோதனையில், துர்நாற்றம் வீசும் கருவாடு மூட்டைகளுக்கு இடையே கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது….
இதையடுத்து லாரியில் இருந்த 5 பேரையும் பிடித்துச் சமயபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்..,
விசாரணையில் ஜோயல் (24), பாண்டிச்சேரி
அரவிந்த் (31), பாண்டிச்சேரி காமராஜ் (29), ராம்ஜி நகர், திருச்சி
ஒண்டிமுத்துகுமார் (46), ராம்ஜி நகர், திருச்சி இதயபாலன் (33), கடலூர் மாவட்டம்
என்பது தெரியவந்தது. இதில் அரவிந்த் என்பவர் திட்டமிட்டு ஒடிசா மாநில எல்லையிலிருந்து கஞ்சாவை வாங்கி, விசாகப்பட்டினம் வழியாகக் கடத்தி வந்துள்ளார்….
கைது செய்யப்பட்ட நபர்கள், சமயபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பள்ளி, மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அதிக லாபத்திற்கு விற்பனை செய்வதற்காகவே இந்த கஞ்சாவைக் கடத்தி வந்ததாக விசாரணையில் ஒப்புக்கொண்டனர்.. இதுகுறித்து சமயபுரம் போலிசார் 5 பேர் மீதும் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
அவர்களிடம் இருந்து 21.296 கிலோ கஞ்சா (சந்தை மதிப்பு சுமார் ரூ. 25 லட்சம்)
கஞ்சா விற்ற பணம் ரூ. 50,000 கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 1 ஈச்சர் லாரி
2 பல்சர் இருசக்கர வாகனங்கள் 4 ஆண்ட்ராய்டு போன்கள் & 1 பட்டன் போன் ஆகியவற்றை போலிசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதி உத்தரவின்பேரில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். போதைப்பொருள் கடத்தலைத் துரிதமாகச் செயல்பட்டுத் தடுத்த சமயபுரம் போலிசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
