திருவாரூர்: மன்னார்குடி அருகே உள்ள 47 தென்பாதி துளசேந்திரபுரம் இணைப்பு சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக் கடையால் பொதுமக்கள், பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு இடையூறுகளும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் முத்துப்பேட்டை சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் வட்டாட்சியர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அந்த மதுபானக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை பரிசீலித்த அதிகாரிகள், ஒரு மாதத்திற்குள் கடையை அகற்றுவதாக உறுதியளித்தனர். இருப்பினும், குறிப்பிட்ட காலத்திற்குள் கடை அகற்றப்படாவிட்டால் கடையை அடித்து உடைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.
