ஆண்டிபட்டி: வார விடுமுறையையொட்டி வைகை அணை பூங்காவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்கு சிறுவர், சிறுமியருக்கான சுற்றுலா ரயில் பழுதானதால் அவர்கள் வேதனையடைந்தனர். ஆண்டிபட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. இந்த வைகை அணைப் பகுதியில் வலது கரை, இடது கரை எனப் பிரிக்கப்பட்டு இரண்டு பூங்காக்கள் அமைந்துள்ளன. இந்த பூங்கா தேனி மாவட்டத்தில் சிறந்த சுற்றுலாத்தளமாக விளங்கி வருகிறது. வைகை அணை பூங்காவில் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பூங்காவிற்கு தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். பூங்காவில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள்.
வைகை அணை பூங்காவிற்கு குடும்பத்துடன் சென்று வருவதற்கும், குழந்தைகள் குஷியாக விளையாடுவதற்கும் ஏற்ற இடமாக உள்ளது. அணையின் இரண்டு புறங்களும் உள்ள பூங்காக்களில் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளது. சிறுவர்கள் மகிழ்ந்து விளையாடுவதற்கு சிறுவர் பூங்கா, பெரியார் மாதிரி வைகை பூங்கா, மச்சக்கன்னி பூங்கா, பயில்வான் பார்க், யானை சறுக்கல், ஊஞ்சல், மலைகள் போல் அமைக்கப்பட்டு வரைபடங்கள், நீரூற்றுகள், புல் தரைகள், ஆங்காங்கே ஓய்விடங்கள், குழந்தைகள் குஷியாக சென்று வர உல்லாச ரயில், படகு குழாம், இசையுடன் தண்ணீர் நடனமாடும் வகையில் அமைக்கப்பட்டு இசை நடன நீரூற்று என ஏராளமான அம்சங்கள் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு, பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.
இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வைகை அணை பூங்காவில் குவிந்தனர். சிறுவர் பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சல், சறுக்குகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் ஏறி மகிழ்ச்சியுடன் பொழுதை களித்தனர். பூங்காவில் உள்ள சிறுவர்களுக்கான ரயில் பழுதடைந்து தற்போது இயக்கப்படாமல் உள்ளது. இதனால் சிறுவர், சிறுமிகள் மிகுந்த வேதனை அடைந்தனர். இந்த ரயில் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு உபகரணங்களையும் முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
