திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதிக் தாயள், தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய தலைவர் குபா. கிருஷ்ணன், காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக இதுவரை என்னென்ன பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. புதிய பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பது குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில்:-
ஒவ்வொரு துறையும் வேகமாக விரைவாக நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒவ்வொரு துறையிலும் ஆய்வு செய்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். அதன்
அடிப்படையில் இன்று திருச்சி மாநகரில் பல்வேறு ஆய்வுப் பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பட்டா வழங்கப்பட வேண்டும் என்பது தமிழகம் முதல்வரின் நோக்கம். அந்த பணிகளை விரைந்து செய்வதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
நவம்பர் 15-க்குள் பெரும்பாலான இடங்களில் பட்டாக்கள் வழங்குவதற்கான பணிகள் நடைபெறும்.
அதே நேரத்தில் முதியோர் உதவித்தொகை பெறுபவர்களுக்கு கைரேகை சரியான முறையில் விழுவதில்லை என்ற ஒரு குறைபாடுகள் இங்கே சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கான நடவடிக்கையும் வங்கியின் மூலமாக பெறுவதற்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டிருக்கிறது.
பட்டா வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட புதிதாக 1500 சர்வேயர்கள் தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இரண்டு மாத காலம் பயிற்சி அளித்தவுடன், தமிழ்நாடு முழுவதும் அவர்கள் பணிகளை மேற்கொள்ள இருக்கிறார்கள்.
சென்னை மாநகரம் 15 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டு நாள்தோறும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அரசு எடுத்த முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் பொருள் சேதமோ உயிர் சேதமோ இன்றி பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் நான்காயிரம் கோடியில் மழைநீர் வடிகால் சார்பாக பணிகள் நடைபெற்று முடிந்ததால் சென்னையில் மழை நீர் தேங்கவில்லை என திமுகவினர் குறிப்பிட்டதற்கு 40% பணிகளை அவர்கள் முடிக்கவில்லை. தமிழக வெற்றி கழகம் பொறுப்பேற்ற பிறகு அப்பணிகளை தற்பொழுது முடித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நாகையில் போதை பொருள் சிக்கியதில் தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு:- தற்பொழுது எல்நினோ ,பேரிடர் பாதிப்பு மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்து மக்களுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். நீங்கள் இது போன்ற கேள்விகளை கேட்டு டைவர்ட் செய்ய வேண்டாம். வேறொரு இடத்தில் இதற்கான பதிலை தருகிறோம் என தெரிவித்தார்.
