மளிகை கடை உரிமையாளர் வீட்டில் 22 சவரன் நகை, ரூ.12 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் சிதம்பரம் நகரத்தை சேர்ந்த தினேஷ் மற்றும் அவரது மனைவி ஆகிய தம்பதியினர் மளிகைக் கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் கடைக்குச் சென்றிருந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, 22 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ. 12 லட்சம் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த தினேஷ், இதுகுறித்துத் தன் மனைவியிடம் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் இருவரும் கோட்டார் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெறும் கொள்ளைச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனினும், கடந்த சில மாதங்களில் மட்டும் பல்வேறு கொள்ளை வழக்குகளுடன் தொடர்புடைய 222 சவரன் தங்க நகைகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
