Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி சமயபுரம் அருகே இரட்டைக் கொலை!


குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி டோல் பிளாசா அருகே சாலை மறியல்!

திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே இரண்டு சிறுவர்கள் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி டோல் பிளாசா அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே தீபாவளி பண்டிகை தினத்தன்று நள்ளிரவில் இரண்டு சிறுவர்கள் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இனாம் சமயபுரம் பகுதியைச் சேர்ந்த ராகுல் (17). பெற்றோரை இழந்த இவர், உறவினர் வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார்.
இவரது உறவினர் வழி சகோதரரான அதே பகுதியைச் சேர்ந்த ராஜாவின் மகன் விஷால் (17). இருவரும் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில், தீபாவளி இரவு சுமார் 11.30 மணியளவில் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகப் பகுதியில், புள்ளம்பாடி வாய்க்கால் கரையோரமாக இருவரும் சென்றுகொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், இருவரையும் வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டித் தாக்கியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் விஷாலின் முகம் சிதைக்கப்பட்ட நிலையிலும், ராகுலின் கழுத்து மற்றும் தலையில் பலத்த வெட்டுக் காயங்களுடனும் இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் உடனடியாக சமயபுரம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சமயபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் விஷால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ராகுலையும் மீட்க முயன்றபோது அவரும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இருவரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷ், நேரில் சம்பவ இடத்திற்கு வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார்.
தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் இருந்து தடயங்களைச் சேகரித்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலையாளிகளைப் பிடிக்கத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இரட்டைக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருச்சி சமயபுரம் டோல் பிளாசா அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இரண்டு சிறுவர்களின் உயிரைப் பறித்த கொடூரச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், கொலைக்கான உண்மையான பின்னணியை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதனால் டோல் பிளாசா அருகே பரபரப்பான சூழல் நிலவியது.
இந்த இரட்டைக் கொலை பழிக்குப் பழியாக நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமா? கொலையில் எத்தனை பேர் ஈடுபட்டுள்ளனர்? கொலையாளிகள் யார்? அவர்களின் பின்னணி என்ன?
என்பது குறித்து சமயபுரம் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை தினத்தன்று ஒரே பகுதியில் இரண்டு 17 வயது சிறுவர்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும், அதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக் கோரி நடைபெற்ற சாலை மறியல் போராட்டமும் திருச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்களா? இரட்டைக் கொலையின் பின்னணி என்ன என்பது காவல்துறையின் விசாரணை முடிவில்தான் தெரியவரும்.

error: Content is protected !!