கோயில் திருவிழாவை ஊர் மக்கள் ஒற்றுமையுடன் நடத்த நடவடிக்கை கோரி எஸ்.பி. அலுவலகத்தில் மனு.
கரூர் மாவட்டம்,கடவூர் அருகே தே.இடையப்பட்டி காமராஜ் நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ மதுரை வீரன் சுவாமி, ஸ்ரீ முருகன் மற்றும் ஸ்ரீ அக்னி பாப்பாத்தி அம்மன் கோயில் திருவிழாவை ஊர் மக்கள் அனைவரும் இணைந்து நடத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, அப்பகுதி பொதுமக்கள் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து நாகமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தே.இடையப்பட்டி காமராஜ் நகர் பகுதியில் சுமார் 200 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வழிபட்டு வரும் இக்கோயிலில், பாரம்பரியமாக ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆடி மாதத்தில் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அப்போது அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி, பொங்கல் வைத்து, கிடாவெட்டு உள்ளிட்ட வழிபாடுகளை ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து விமரிசையாக நடத்துவது வழக்கம்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருவிழா செலவினங்கள் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கோயில் நிர்வாகக் குழுவினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை. இதனால் திருவிழாவை ஒன்றிணைந்து நடத்த முடியாத நிலை நீடித்து வருகிறது.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு சிலர் தனிப்பட்ட முறையில் திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்ததாகவும், இதனால் ஊர் மக்களிடையே மீண்டும் பிரச்சினை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
எனவே, கோயில் திருவிழாவை தனிநபர்கள் மட்டும் நடத்தாமல், ஊர் பொதுமக்கள் அனைவரின் ஒத்துழைப்புடனும் பாரம்பரிய முறைப்படியும் ஒற்றுமையாக நடத்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், கந்த சஷ்டி விரதம் கடைப்பிடிக்கப்படும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிடாவெட்டு நடத்த சிலர் ஏற்பாடு செய்து வருவதாகவும், அதனைத் தடுத்து நிறுத்தி, ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து திருவிழாவை நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தங்களது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
