திருச்சி மாநகர், மாவட்ட காங்கிரஸ் சார்பில், மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு 137வது பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி சேவா சங்கம் பள்ளி எதிரே உள்ள நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியின் மண்டல மறுசீரமைப்பு தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில், திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் எல்.ரெக்ஸ் முன்னிலையில் மாவட்டச் செயலாளர் எஸ் ஆர் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் நேரு சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் பீட்டர் அல்போன்ஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஐரோப்பிய நாடுகளில் வாக்குரிமை இல்லாத நிலையில் இந்தியாவில் அனைவருக்கும் வாக்குரிமையை வழங்கி இந்தியாவை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உயர்த்திய பெருமை நேருவை சேரும். ஆனால் அத்தகைய பெருமைமிகு ஜனநாயகத்தை குழி தோண்டி புதைப்பதற்கும், குரல்வளையை நெரிப்பதற்கும் ஒவ்வொரு நாளும் புதிய சதி திட்டங்களை அறிமுகப்படுத்தி ஜனநாயக நிறுவனங்களை சீரழிப்பதையே தங்களுடைய முழு நேர பணியாக மோடி, அமித்ஷா கூட்டணி செய்து வருகிறது. ஜனநாயகத்தின் 4 தூண்களின் செயல்பாடுகளை முடக்குவதும் அதன் மூலம் ஜனநாயகத்தின் வேர்களை வெட்டி வீழ்த்துவதை மோடி அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது.அடிதட்டு மக்களின் ஜனநாயக ஆயுதமான வாக்குரிமை பறிப்பதை அனுமதிக்க மாட்டோம் என்பதை நேரு பிறந்தநாளில் நாங்கள் உறுதி ஏற்கிறோம்.
மேகேதாட்டில் அணைக்கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என பிரதமர் மோடியை வைத்துக்கொண்டு கர்நாடக முதல்வர் சிவகுமார் பேசியுள்ளார். அவரை அப்படி பேசுவதற்கு அனுமதித்து மோடி மிகப்பெரிய குற்றத்தை செய்துள்ளார். ஒரு மாநிலத்தின் முதல்வர் தன்னிச்சையாக பேசுவது வேறு, ஆனால் தேசத்தின் பிரதமரை மேடையில் வைத்துக் கொண்டு இப்படி பேசுவது தவறு. அதை கண்டும் காணாமல் அமர்ந்திருந்த பிரதமர் மோடி தமிழகத்தின் நலனுக்கு விரோதமாக செயல்படுகிறார். கர்நாடக முதல்வர் சிவக்குமாரை அப்படி பேச அனுமதித்திருக்க கூடாது அது தவறு என்று மேடையிலேயே பிரதமர் மோடி அவரை கண்டித்து இருக்க வேண்டும். அப்படி அவர் சொல்லாததன் மூலம் பிரதமர் மறைமுகமாக தமிழக நலனுக்கு எதிராக செயல்படுகிறார் என்று தான் பொருள். எந்த சக்தியாலும் அணைக்கட்டுவதை தடுக்க முடியாது என்று பிரதமரை வைத்துக்கொண்டு ஒரு முதல்வர் பேசுவார் என்று சொன்னால் அதை பிரதமர் அனுமதியோடு தான் பேசுகிறார் என்ற தோற்றம் வருகிறது. அப்படிப்பட்ட பிரதமர் நமக்கு தேவையா?
தவறு செய்த தவெக எம்எல்ஏக்கள் மீது முதல்வர் நடவடிக்கை எடுப்பார். விஜய் வாய் திறப்பதில்லை என்று கூறும் வேளையில்
பிரதமர் மோடி எத்தனை பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி உள்ளார்? நிச்சயம் நமது முதல்வர் விஜய் விரைவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காவல்துறையை கொண்டு சீரமைப்பார்.
நூலகங்களில் 75 ஆயிரம் போலி நூல்கள் இடம் பெற்றது தொடர்பாக குழுவின் தலைவராக இருந்த பேராசிரியர் ஜெயரஞ்சன் ஏன் வாய் திறக்கவில்லை?
விஜய் ஆட்சியில் நல்ல பல மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. அதை பொதுமக்கள் வரவேற்று பாராட்டினால் இந்த மாற்றங்கள் தொடரும். அம்மா சமைத்து வைக்கும் உணவில் கல் கிடந்தால் தூக்கி எறிந்து விட்டு சாப்பிடுவது போல, தவறு செய்த தவெக எம்எல்ஏக்களை தூக்கி எறிந்து விட வேண்டும். கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி வைத்த தொடர்பாக முறையான புகார் வரவேண்டும். அதற்கான ஆதாரங்கள் கிடைக்க வேண்டும் முறையான விசாரணை நடைபெற வேண்டும். பிறகு உரிய நடவடிக்கை இருக்கும். ஒரே நாளில் நடைபெற இது என்ன போலீஸ் என்கவுண்டர் மாதிரி சுடுவதா என்ன? முதல்வர் விஜய்க்கு ஒவ்வொரு நாளும் நெருக்கடி கொடுக்கிறீர்கள். அவருடைய ஆட்சி தொடரக்கூடாது என்று நினைக்கிறீர்கள். அவரது ஆட்சி வேறு பரப்புவதற்கு முன்னாடியே அந்தக் காட்சியை புடுங்கி எறிய வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அரசு நிர்வாகம் அவரது கைக்குள் வருவதற்கு முன்பே அவரது அரசை கலைக்க நினைக்கிறார்கள். நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் டி லிமிடேஷன் வாக்கெடுப்பு நடக்கும் போது நடந்து வரக்கூடிய சதிகளின் அத்தனை முகத்திரையும் கிழிக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
