திருமுடிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தன்னை பொய்யான வழக்குகளில் சிக்க வைக்க முயல்வதாக கூறி, அப்பகுதியை சேர்ந்த வினோத்குமார் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்திற்கு வந்து புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வினோத்குமார் தனது புகாரில், திருமுடிவாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் ஆய்வாளர் முத்துகுமார் மற்றும் காவலர் குமார் ஆகியோர் தன்னை மிரட்டியதாகவும், பொய்யான வழக்குகளில் சிக்க வைக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
உயிருக்கு பாதுகாப்பு கேட்டு தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த வினோத்குமார், அங்கு அதிகாரிகளிடம் விரிவான புகார் மனுவை அளித்தார்.
புகார் அளித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய வினோத்குமார்,
நான் எந்த தவறும் செய்யாமல் இருக்கிறேன். ஏற்கனவே என் மீது ஒரு பொய்யான வழக்கு போட்டு சிக்க வைத்துள்ளார்கள். அந்த வழக்கில் இருந்து இன்னும் மீளவில்லை. அதற்குள் தற்போது மீண்டும் என்னை மிரட்டுகிறார்கள். மற்றொரு பொய்யான வழக்கில் என்னை சிக்க வைக்க காவல் ஆய்வாளர் முயல்கிறார். எனக்கும் என் குடும்பத்திற்கும் பாதுகாப்பு வேண்டும். இது குறித்து காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளேன். விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”
என்று கூறினார்.
குடும்பத்துடன் வந்து ஒருவர் காவல் ஆய்வாளர் மீதே புகார் கொடுத்த சம்பவம், தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
