கோவை, மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை லிங்காபுரம் பகுதி அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டு யானை, மான், காட்டு மாடு, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்வதை தொடர்ந்து வாடிக்கையாக வைத்து வருகிறது. இதனால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதோடு அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனிடையே லிங்காபுரம் முக்கு வளைவு பகுதியில் ஜெயப்பிரகாஷ்(53) என்பவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். மேலும், அங்கேயே தனது தாய் ராணி (75) என்பவருடன் குடியிருந்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு உணவு உண்ண செல்லும் வேளையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை இவரது தோட்டத்தை சுற்றி அமைத்திருந்த சோலார் மின்வேலியை உடைத்து சேதப்படுத்தி விட்டு உள்ளே நுழைந்தது. சத்தம் கேட்டு அங்கிருந்த வளர்ப்பு நாய்கள் குரைத்து துரத்திச்சென்றன. அப்போது,வெளியே வந்த ஜெயப்பிரகாஷ் மற்றும் அவரது தாய் ராணி ஒற்றை காட்டு யானையை சப்தமிட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர். அப்போது,போ…சாமி..போ…என செல்லமாக அதட்டியதும் காட்டு யானை சாந்தமாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதுகுறித்து விவசாயி ஜெயப்பிரகாஷ் கூறுகையில் ‘வனப்பகுதியில் இருந்து வெளியேறும் பாகுபலி யானை மற்றும் மற்றுமொரு யானை என இரு யானைகள் தொடர்ந்து இப்பகுதியில் முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் கடன் வாங்கி விவசாயம் செய்யும் எங்களை போன்ற விவசாயிகள் பெரும் நஷ்டத தை சந்தித்து வருகிறோம். எனவே, வனத்துறையினர் இரவு நேர ரோந்துப்பணியை தீவிரப்படுத்தி காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
