மார்ஃபிங் செய்யப்பட்ட ஆபாச படங்களை பரப்பியதாக நடிகை ருக்மிணி வசந்த் அளித்த புகாரில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ‘காந்தாரா: எ லெஜண்ட் சாப்டர்-1’ படத்தின் கதாநாயகி ருக்மிணி வசந்தின் புகைப்படங்களை, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சிலர் ஆபாசமாக மார்ஃபிங் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர். இது தனது புகழுக்குக் களங்கம் விளைவிப்பதாக நடிகை அளித்த புகாரின் பேரில், பெங்களூரு சைபர் கிரைம் போலீசார் தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாகப் பாகல்கோட்டை சேர்ந்த ரவிகுமார் (24), சிமோகாவைச் சேர்ந்த சந்திரகாந்த் (33) மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த ரஞ்சித் (25) ஆகிய 3 வாலிபர்களைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, கைதான மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
