பரமக்குடி: எடப்பாடி பழனிசாமி தோல்வி பயத்தில், விரக்தியில் திமுக குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்கிறார் என்று பரமக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சிவகங்கை மாவட்டத்தில் 4 தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, நேற்றிரவு திருப்புத்தூர் அருகே வையிரவன்பட்டியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் பேசினார். பின்னர், அங்கிருந்து கார் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு சென்று தனியார் ஓட்டலில் இரவில் தங்கினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 7 மணியளவில், வழக்கமான நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது பரமக்குடி திமுக வேட்பாளர் கதிரவனை ஆதரித்து வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டார். பரமக்குடி ஆர்ச் பகுதியில் இருந்து நடைபயிற்சி தொடங்கியவர் மெயின் பஜார், ஆத்துப்பாலம் வழியாக எமனேஸ்வரம் வரை சுமார் 5 கிமீ தூரம் வரை நடந்து சென்றார். முதல்வருக்கு வழி நெடுகிலும் பொதுமக்கள், வியாபாரிகள், இளைஞர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்வருடன் பொதுமக்கள், மாணவர்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
பின்னர், எமனேஸ்வரத்தில் சாந்தாராம் என்ற நெசவாளர் வீட்டிற்கு முதல்வர் சென்று, அங்கு நடைபெறும் நெசவு பணியை பார்வையிட்டார். பின்னர், முதல்வர் தறியில் அமர்ந்து ஆர்வமுடன் நெசவு செய்துபார்த்தார். பின்னர், அதே பகுதியில் பாவு பிரிக்கும் நெசவாளர்களை சந்தித்து அவர்களிடம் முதல்வர் குறைகளை கேட்டறிந்தார். மேலும், பாவு பிரிக்கும் பணியிலும் ஈடுபட்டார். அப்போது முதல்வரிடம் நெசவாளர்கள், `மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கு நிவாரண நிதியுதவி வழங்குவதுபோல, நெசவாளர்களுக்கு மழைக்கால நிவாரண நிதி வழங்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தனர். மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும் உங்களது (நெசவாளர்கள்) கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று முதல்வர் உறுதியளித்தார்.
பின்னர், முதல்வர் திரும்பும் வழியில், தூய்மை பணியில் ஈடுபட்ட நகராட்சி தூய்மை பணியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, `உங்களுக்கு அரசின் சலுகைகள் முறையாக கிடைக்கிறதா? காலை உணவு திட்டத்தில் உணவு வழங்கப்படுகிறதா’ என கேட்டறிந்தார். மேலும், தூய்மை பணியாளர்களிடம் உடல்நலம் குறித்தும் விசாரித்தார். எமனேஸ்வரம் நேருஜி மைதானத்தில் நடைபயிற்சியை முதல்வர் நிறைவு செய்தார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து திமுகவை விமர்சனம் செய்வது குறித்த கேள்விக்கு, `எடப்பாடி பழனிசாமி தோல்வி பயத்தில், விரக்தியில் திமுக குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்கிறார்’ என்றார்.
ஜனநாயகன் திரப்படம் `லீக்’ ஆனது குறித்த கேள்விக்கு, `நோ கமெண்ட்ஸ்’ என்றார் முதல்வர். அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை பார்த்தீர்களா என்ற கேள்விக்கு, `அதனை நான் படிக்கவில்லை’ என்றார் முதல்வர். முன்னர், திமுக – அதிமுக இடையேதான் போட்டி என்று கூறுவீர்கள். தற்போது, தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் இடையேதான் போட்டி என கூறுகிறீர்களே என்று செய்தியாளர்கள் கேட்டபோது, `தற்போது அதிமுகவிற்கு தலைமை என்பது இல்லை. அக்கட்சி டெல்லி பாஜ கட்டுப்பாட்டில் உள்ளது. அதிமுக என்ற முகமூடியை அணிந்துகொண்டு பாஜக தமிழ்நாட்டுக்குள் நுழைந்துள்ளது. இதனால்தான் தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் இடையே போட்டி என்று கூறுகிறேன் என்றார் முதல்வர்.
தேர்தல் ஆணையம் தொடர்ந்து தமிழக உயர் அதிகாரிகளை மாற்றுவது குறித்த கேள்விக்கு, `இதுகுறித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளேன். மேலும், தேர்தல் ஆணையத்திற்கு டிஆர்.பாலு புகார் அளித்துள்ளார்’ என்றார். பின்னர் முதல்வர் மீண்டும் தனியார் ஓட்டலுக்கு சென்றார்.
பரமக்குடியில் இன்று மாலை மாபெரும் பொதுக்கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியில் இன்று மாலை திமுக சார்பில் மாபெரும் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். அப்போது, திமுக வேட்பாளர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), அமைச்சர் ராஜகண்ணப்பன் (முதுகுளத்தூர்), கதிரவன் (பரமக்குடி), திருவாடானை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கரு.மாணிக்கம் உள்ளிட்டோரை ஆதரித்து பிரசாரம் செய்து பேசுகிறார்.
