Skip to content

“அதிமுக இன்று பாஜகவின் பிடிக்குள் சிக்கியுள்ளது” – திருச்சியில் தொல். திருமாவளவன் ஆவேசம்!

சிதம்பரத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், மத்தியில் ஆளும் மோடி அரசு இந்தியாவைத் தீவிரமாக ‘இந்தி மயமாக்’குவதில் குறியாக உள்ளது என்று குற்றம் சாட்டினார். ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே மதம் என்கிற கொள்கையை முன்னிறுத்தி மோடி அரசு செயல்படுவது இந்தியாவின் பன்மைத்துவத்திற்குப் பெரும் ஆபத்தாக முடியும் என்றும், இந்திய மொழிகள் அனைத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் விசிக உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இரட்டை இன்ஜின் என்று சொல்லும்போது டெல்லியில் ஒரு இன்ஜின், தமிழ்நாட்டில் ஒரு இன்ஜின் என்று சொல்கிறார்களா? என்ற தெளிவு தேவைப்படுகிறது என்றார். தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி இயங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது அதிமுகவிற்குப் பின்னடைவையே ஏற்படுத்தும். அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் பிரதமர் தலைமையில் கூட்டணி ஆட்சி மலரும் என்று பேசியுள்ளார். அதிமுக ஆட்சி மலரும் என்ற நிலை மாறி இருப்பது கவலை அளிக்கிறது. இன்று பாஜகவின் முழுமையான பிடிக்குள் அதிமுக சென்றுவிட்டது என்பதையே இது காட்டுகிறது.

டாக்டர் ராமதாஸ் திமுக அணிக்குள் வர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், அது குறித்து ஆருடம் சொல்ல வேண்டிய தேவை எனக்கு இல்லை என்றும், அது அவர் எடுக்க வேண்டிய முடிவு என்றும் கூறினார். எங்களைப் பொறுத்தவரை 2011-ம் ஆண்டிற்குப் பிறகு அதிமுக அல்லது பாஜக இருக்கும் அணிகளில் இடம் பெறுவதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம் என்றார். நடிகர் விஜய் குறித்து பேசுகையில், அவர் பாஜகவின் செயல்பாடுகளை விமர்சிக்க வேண்டிய இடத்தில் கூட விமர்சிக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது என்றும், வரும் தேர்தலில் அவர் தனித்து ஒரு கூட்டணியை உருவாக்குவார் எனத் தோன்றுவதாகவும் தெரிவித்தார். இறுதியாக தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசுகையில், கமல்ஹாசன் மூன்று இலக்கத்தில் கேட்க முடியாது என்பதால் இரண்டு இலக்கத்தில் இடங்கள் கேட்கிறார் என்று குறிப்பிட்ட அவர், தமிழகத்தின் தேவையை உணர்ந்து விசிகவின் இடங்கள் அமையும் என்று கூறி பேட்டியை நிறைவு செய்தார்.

இந்தப் பேட்டியின் போது விசிக திருச்சி மண்டல செயலாளர் பிரபாகரன், மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ், பெரம்பலூர் மண்டல செயலாளர் கிட்டு உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

error: Content is protected !!