சென்னை -தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக அமைந்தது, அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் இன்று (நவம்பர் 27) தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தது. சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் நடைபெற்ற எளிய விழாவில் செங்கோட்டையனும் அவரது நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும் தவெக கொடியை ஏற்று உறுதிமொழி ஏற்றனர். இணைந்த உடனேயே அவருக்கு நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், ஈரோடு-கோவை-திருப்பூர்-நீலகிரி மாவட்ட அமைப்புச் செயலாளருமான பொறுப்புகள் வழங்கப்பட்டன.
தவெகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “நான் என்று ஒருவன் நினைத்தால், தான் என்று ஆண்டவன் பார்த்துக்கொள்வான், தண்டித்து விடுவான். 50 ஆண்டுகாலம் உழைத்த கட்சியில் இருந்து உறுப்பினர் பதவியைப் பறித்தது எடப்பாடி பழனிச்சாமி எனக்கு கொடுத்த பரிசு. பசும்பொன்னில் தேவர் ஜெயந்திக்குச் சென்று சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி. ஆகியோரைப் பார்த்து வந்ததாலேயே என்னை நீக்கினார். அவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று சொன்னதற்கே இந்த நிலை” என்று வேதனையுடன் தெரிவித்தார்.
மேலும், அதிமுகவைப் பற்றி கடுமையாக விமர்சித்த செங்கோட்டையன், “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் அம்மா வழியில் பயணித்தேன். அம்மா மறைவுக்குப் பின் இயக்கம் பல கூறுகளாக பிரிந்தது. இன்று திமுகவும் அதிமுகவும் வேறு வேறு அல்ல; ஒன்றாக இணைந்து பயணிக்கின்றன. 1975-ல் கட்சிப் பொதுக்குழுவை சிறப்பாக நடத்தியதற்காக எம்.ஜி.ஆரால் நேரில் பாராட்டப்பட்டவன் நான்” என்று தன் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
அதைப்போல, விஜய்யை புகழ்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் இன்று பள்ளிக் குழந்தைகள் கூட பெற்றோரிடம் ‘அப்பா, அம்மா, விஜய்க்கு ஓட்டுப் போடுங்கள்’ என்று சொல்லும் நிலை உருவாகியுள்ளது. தூய்மையான ஆட்சி தர வேண்டும் என்று மக்கள் மனதில் தோன்றியுள்ளது. அதற்காக இளவல் விஜய் மாபெரும் இயக்கத்தை உருவாக்கியுள்ளார். தூய்மையான ஆட்சி தமிழ்நாட்டில் வர வேண்டும் என்பதற்காகவே தெளிவான முடிவெடுத்து தவெகவில் இணைந்தேன்” என்று தெரிவித்தார்.
2026 தேர்தலை நோக்கி பேசிய செங்கோட்டையன், “தவெகவிற்கு மக்கள் அமோக ஆதரவு தந்து வருகின்றனர். 2026-ல் புரட்சியை உருவாக்கி வெற்றி பெறச் செய்வார்கள். திமுக, பாஜக யாரும் என்னைத் தொடர்பு கொண்டதே இல்லை. அமைச்சர் சேகர்பாபுவை நான் சந்தித்ததே இல்லை” என்று தெளிவாக மறுத்தார்.

