பாமக கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அன்புமணி ராமதாஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு அன்புமணிதான் காரணம் என்று தெரிவித்தார். “அன்புமணியால் பாமகவுக்கு ஏற்பட்ட சோதனை, நெருக்கடி சொல்லி மாளாது” என்று வருத்தம் தெரிவித்தார். ராமதாஸும் அன்புமணியும் உட்கார்ந்து பேசினால் தான் தீர்வு கிடைக்கும் என்றும், பிரிந்து கிடந்தால் தேர்தலை எப்படி சந்திக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.
ஜி.கே. மணி, “தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத சக்தியாக பாமகவை உருவாக்கியவர் ராமதாஸ். அன்புமணியின் செயல்பாடுகளால் ராமதாஸ் கண்ணீர் வடிக்கிறார். கட்சிக்காக ராமதாஸ் பலமுறை சிறை சென்றார். அன்புமணி எத்தனை முறை சிறை சென்றார்?” என்று கேள்வி எழுப்பினார். ராமதாஸுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது என்று அன்புமணி பேசியது மனசாட்சிக்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டினார்.“மனதளவில் கூட துரோகம் நினைக்காத என்னை துரோகி என்று அன்புமணி பேசுகிறார்.
இது மிகவும் வருத்தமாக உள்ளது” என்று ஆதங்கம் தெரிவித்த ஜி.கே. மணி, அன்புமணியை இளம் வயதில் மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தவர் ராமதாஸ் என்றும் கூறினார். அன்புமணிக்கு தேர்தலில் சீட், மத்திய அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று பேசியது தான்தான் என்றும், “என் அப்பா ராமதாஸுக்கு அடுத்ததாக உங்களைத்தான் நினைக்கிறேன்” என்று அன்புமணி கூறியதாகவும் நினைவு கூர்ந்தார்.
அன்புமணியை அமைச்சராக்க கூடாது என்று உறுதியாக இருந்தவர் காடுவெட்டி குரு என்றும் ஜி.கே. மணி தெரிவித்தார். “பாமகவில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு நான்தான் காரணம் என்று அன்புமணி பேச இருப்பதாக தெரிகிறது” என்று வருத்தம் தெரிவித்தார். ராமதாஸை “கொள்ளுங்கள்” என்று பதிவிட்டவரை அன்புமணி பாராட்டியதாகவும் குற்றம் சாட்டினார்.
பாமகவில் அன்புமணி தம்பிகள்-தங்கைகள் படை உருவாக்கியதாகவும், நிர்வாகிகள் ராமதாஸிடம் அன்புமணியை வெளியே வரச் சொல்லியதாகவும் ஜி.கே. மணி கூறினார். இந்த உள்கட்சி மோதல் கட்சியின் ஒற்றுமையை பாதித்துள்ளது என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.இந்த பேட்டி பாமகவின் உள்பிளவை மேலும் ஆழப்படுத்தியுள்ளது. 2026 தேர்தலுக்கு முன்னதாக இந்த மோதல் கட்சியின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றனர். ராமதாஸ், அன்புமணி இடையே பேச்சுவார்த்தை நடக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

